பீகார் மாதிரி போல் பாஜக, தமிழகத்தில் அதிமுகவிலிருந்து பிரிந்த தலைவர்களை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது.
பீகார் தேர்தல் களத்தில், ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக எல்லா கட்சிகளையும் ஒருங்கிணைத்து பெரும் வெற்றியைக் குவித்த மாதிரியையே தமிழகத்திலும் பாஜக பயன்படுத்தும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பீகார் தேர்தலை ஒட்டி, அடுத்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் வங்கம், அஸாம், தமிழ்நாடு, கேரளம், புதுவை ஆகிய மாநிலங்களின் தேர்தல் வியூகம் தொடர்பில் பாஜக விவாதித்து வருகிறது. இதில் பீகார் மாதிரி தமிழகத்துக்குப் பெருமளவில் பொருந்தும் என்று தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பாண்டா பேசியதாகத் தெரிகிறது.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தின் கட்சியுடன் முரண்பாட்டில் இருந்த கட்சிகளை எல்லாம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவந்துதான் இவ்வளவு பெரிய வெற்றியைக் குவித்துள்ளது பாஜக. லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் எப்போதுமே நிதிஷ் மீது கசப்பைக் கொண்டவர். நிதிஷுடனான கருத்து வேறுபாட்டில், ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து பிரிந்து வந்து ஜிதன் ராம் மஞ்சி தொடங்கிய கட்சிதான் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா. ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சாவின் தலைவர் உபேந்திர குஷ்வாஹாவும் அப்படித்தான். நிதிஷுடனான முரண்பாட்டில் ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து விலகித்தான் அக்கட்சியை ஆரம்பித்தார்.
நிதிஷுடன் இவர்கள் எல்லோருக்குமே இன்றும் முரண்பாடுகள் நிலவும் சூழலிலும், பாஜக இவர்கள் அனைவரிடமும் பேசி நிதிஷுக்கும் களச் சூழலை உணர்த்தி ஒரே குடைக்குள் கொண்டுவந்தது. அதன் விளைவாகவே இவ்வளவு பெரிய வெற்றி இன்று கிடைத்துள்ளது. முன்னதாக 2020 சட்டமன்றத் தேர்தலில்கூட சிராக் பாஸ்வானை ஏற்க நிதிஷ் மறுத்தார். குஷ்வாஹாவும் அப்போதும் கூட்டணியில் இல்லை. விளைவாக அப்போது 43 தொகுதிகளில்தான் நிதிஷ் கட்சி வென்றது. ஆனால், சிராக்கும் குஷ்வாஹாவும் கூட்டணிக்குள் வந்தால், களம் மாறும் என்பதை நிதிஷிடம் வலியுறுத்திப் பேசினார் அமித் ஷா. விளைவாகவே இம்முறை கூட்டணி 202 இடங்களை வென்றதுடன் நிதிஷ் கட்சியின் எண்ணிகையும் கிட்டத்தட்ட இரு மடங்காக, அதாவது 85 இடங்களாக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2016க்குப் பிறகு சந்தித்த அனைத்துத் தேர்தல்களிலுமே அதிமுக தோல்வி அடையக் காரணம் அதில் ஏற்பட்டிருக்கும் பிளவுகளே. அதிமுக ஒன்றுபட்டால், மீண்டும் அக்கட்சியால் வெற்றி அடைய முடியும் என்பது பாஜக மேற்கொண்ட கருத்தாய்வுகளில் தெரியவந்திருக்கிறது. ஆனால், இதற்கு அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி தயாராக இல்லை. இந்தச் சூழலில், அதிமுகவிலிருந்து பிரிந்து நிற்கும் தலைவர்களை அதிமுகவுக்குள் சேர்க்கச் சொல்லாமல், மாறாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவரும் பீகார் உத்தியைக் கை கொள்ளலாம் என்று பாஜக திட்டமிடுகிறது. அதேபோல, பாமகவுக்குள் தந்தை, மகன் இடையே உள்ள மோதலையும் அடுத்த சில மாதங்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவந்து ஒன்றிணைந்த பாமகவாக கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதையும் அமித் ஷாவிடம் பாண்டா கூறியிருக்கிறார். ஆக, பீகார் பதவியேற்பு நிகழ்வுக்கு அடுத்து, தமிழக தேர்தலில் கவனம் செலுத்தவுள்ள பாஜக அடுத்து, பாமக, அதிமுக ஒருங்கிணைப்பு முயற்சியிலேயே களம் இறங்கும் என்று தெரிகிறது!