தேசிய பத்திரிகை தினம்: “அதிகாரத்தில் இருப்போரால் அமைப்புகள் வளைக்கப்படலாம்” - முதல்வர் ஸ்டாலின் !
1966 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய பத்திரிகை கவுன்சிலின் நினைவாக, நவம்பர் 16ஆம் தேதி தேசிய பத்திரிக்கை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தேசிய பத்திரிக்கை தினமான இன்று முதல்வர் மு.க ஸ்டாலின், பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கும் பத்திரிக்கையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக, நவம்பர் 16 ஆம் தேதி, 1966 ஆம் ஆண்டு இந்திய பத்திரிகை கவுன்சில் (PCI) நிறுவப்பட்டது. அதை நினைவுகூறும் வகையில், இந்தியாவில் ஆண்டு தோறும் நவம்பர் 16 ஆம் தேதி தேசிய பத்திரிக்கை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான், பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எந்தவொரு ஜனநாயகத்திலும், அதிகாரத்தில் இருப்பவர்களால் அரசு வளைக்கப்படலாம் அல்லது கைப்பற்றப்படலாம். ஆனால், பத்திரிகைகள் ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சக்தியாக இருக்க வேண்டும்.
தேசிய பத்திரிகை தினத்தன்று, ஒன்றிய பாஜக அரசின் சர்வாதிகாரத்திற்கு அடிபணிய மறுத்து, பாஜக-வின் தோல்விகள், அதன் ஊழல் செயல்கள் மற்றும் அதன் ஏமாற்று வேலைகளை ஆகியவற்றை துணிச்சலுடன் வெளிப்படுத்தும் ஒவ்வொரு பத்திரிகையாளரையும் நான் பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

