செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி pt web
தமிழ்நாடு

செங்கோட்டையனுக்குப் பின்னால் பாஜக! டெல்லி வட்டாரங்கள் சொல்லும் தகவல்களால் அதிர்ச்சியில் அதிமுக

அதிமுகவில் கலகக் குரலை எழுப்பியதன் தொடர்ச்சியாக, கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் டெல்லி சென்றதும், அமித் ஷாவை சந்தித்து வந்ததும் பாஜகவின் முன்னெடுப்பிலேயே நடந்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

PT WEB

பாஜக கடைக்கண் பார்வையுடனேயே செங்கோட்டையனின் செயல்பாடுகள் நடப்பதாகவும் இனி அவருடைய அடுத்தடுத்த செயல்பாடுகளும் பாஜக ஆலோசனைப்படியே நடக்கும் என்றும் தெரிகிறது. முன்னதாக, தன்னுடைய சமீபத்திய நகர்வுகளுக்கு முன்பே ஆடிட்டர் குருமூர்த்தியுடன்    செங்கோட்டையன் ஆலோசனை கலந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

செங்கோட்டையன்

டெல்லியிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு திரும்பிய செங்கோட்டையன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷாவையும், நிர்மலா சீதாராமனையும் சந்தித்ததாக தெரிவித்தார். அதிமுக ஒன்றிணைய வேண்டுமென்கிற நோக்கத்தோடு, இருவரிடமும் தான்கருத்துகளை எடுத்துரைத்ததாகவும் கூறினார்.

அதிமுகவுக்குள் கலகக் குரல் எழுப்பிய அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான செங்கோட்டையனை மத்திய அமைச்சர் அமித் ஷா சந்தித்ததும், இதை வெளிப்படையாகவே செங்கோட்டையன் பொதுவெளியில் பகிர்ந்துகொண்டிருப்பதும் அதிமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியுள்ளது.

செங்கோட்டையன் சமீபத்தில் கட்சிக்குள் கலகக் குரலை எழுப்பியதுமே, பாஜக இதன் பின்னணியில் இருக்கலாம் என்ற பேச்சு பரவலாகப் பேசப்பட்டது. முன்னதாக, ஆடிட்டர் குருமூர்த்தியுடன் ஆலோசனை கலந்ததாகவும் சொல்லப்பட்டது. ஒன்றிணைந்த அதிமுகவால்தான் திமுகவை எதிர்கொள்ள முடியும் என்ற கருத்தைக் கொண்டவர் குருமூர்த்தி. தமிழகம் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது, பாஜக மூத்த தலைவர்கள் ஆலோசனை கலக்கக்கூடிய இடங்களில் ஒன்று குருமூர்த்தியின் இல்லம்.

Sengottaiyan

அதிமுகவுடனான கூட்டணியை உறுதிசெய்ய  சென்னை வந்திருந்தபோதுகூட குருமூர்த்தி இல்லத்துக்கு சென்று வந்தார் அமித் ஷா. தமிழகத்தைப் பொறுத்த அளவில் அதிமுகவை ஒருங்கிணைப்பதையும், திமுகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைப்பதையுமே தேர்தல் வியூகமாகக் கொண்டிருக்கிறார் அமித் ஷா. இதை அதிமுகவுக்கு பல்வேறு வகைகளிலும் அவர் வெளிப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால், அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி ஒருங்கிணைந்த அதிமுக எனும் கருத்துக்கு முற்றிலும் எதிராக இருக்கிறார். இதனூடாகத்தான் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் அமமுக பொதுச்செயலர் தினகரனும். பாஜக தலைமை இதை விரும்பவில்லை. இதனூடாகத்தான் செங்கோட்டையன் கலகக் குரலை எழுப்பினார். அடுத்தடுத்து வேகமாக நடந்துவரும் இந்த மாற்றங்கள் அதிமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.