செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
சென்னை அருகே ஆவடி ஜீவானந்தம் தெரு, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் இவருக்கும், உறவுக்காஅர பெண்ணான பியூலா என்பவருக்கும் கடந்த ஓராண்டிற்கு முன் காதல் திருமணம் நடந்துள்ளது. ராஜ்குமார் தனது தந்தை தாய் சகோதரர் மற்றும் தங்கையுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், பியூலா தனது படுக்கை அறையில் நேற்று சடலமாக கிடப்பதைக் கண்ட அவரது உறவினர் கூச்சலிட்டுள்ளார். இதை அடுத்து சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் ஆவடி போலீசருக்கு தகவல் தெரிவிக்கவே, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போலீசார், விசாரணையை துவங்கினர். அப்போது பியூலா கழுத்தில் தழும்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து பியூலாவின் கணவர் ராஜ்குமார் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, மகள் உயிரிழந்தது கேள்விப்பட்ட பியூலாவின் தாய் அண்ணா குமாரி, ஆந்திராவிலிருந்து ஆவடி காவல் நிலையத்திற்கு இரவு 2 மணிக்கு வந்தார்.
அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர்... “என் மகள் உயிரிழப்புக்கு காரணமான அவருடைய மாமனார் மற்றும் இரண்டு மகன்களையும் கொல்ல வேண்டும். இல்லையென்றால் நான் இறந்து விடுவேன். நான் ஒரு ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலை செய்து வருகிறேன். எனக்கு கணவரும் கிடையாது. நான் கண்டிப்பாக இறந்து விடுவேன். எனது மகளை நெல்லூரில் பட்டப் படிப்பு படிக்க வைத்தோம். ஆனால், இவர்கள் சென்னைக்கு அழைத்து வந்து ஆசை வார்த்தை கூறி கொடுமைப்படுத்தி சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொண்டார்கள்.
கடைசியாக 3 ஆம் தேதி காலை தொலைபேசியில் மகளுடன் பேசிய பொழுது வீட்டில் சாமி கும்பிடும் பொழுது கணவர் ராஜ்குமாரின் அண்ணன் பிரேம்குமார் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக கூறினார்” என்றார். இதையடுத்து அண்ணா குமாரியிடம் விசாரிக்க வேண்டும் என அவரை காவல் நிலையத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர்.
முன்னதாக உயிரிழந்த பியூலா ராணியின் பெரியப்பா ஜோசப் கூறுகையில், பியூலாவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.