கிருஷ்ணகிரி: சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறு - தம்பியை கொலை செய்த அண்ணன் கைது
செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பட்டவாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீராம் (40), முனிந்தரா (38). சகோதரர்களான இவர்கள் இருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இதில் இருவரும் அடிக்கடி வாய்த் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு மதுபோதையில் இருந்த சகோதரர்கள் இருவரும், மாறி மாறி வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது ஆத்திரமடைந்த அண்ணன் ஸ்ரீராம், தம்பி முனிந்தராவை கட்டையால் தாக்கியுள்ளார். இதில், சரிந்து விழுந்து முனிந்தரா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரம் பாகலூர் போலீசாருக்கு தெரியவந்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அண்ணன் ஸ்ரீராமை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.