தவெகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு எதிர்காலத்தில் அரசியலில் எதுவும் நடக்கலாம் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சொன்ன பதில் அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இடம் கிடைக்காத அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் டிடிவி தினகரன் தலைமையில் தனி கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியதால், தினகரனின் அமமுகவும், பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவும் பாஜக கூட்டணியில் இணைந்தன. இப்போது மீண்டும் பாஜக -அதிமுக கூட்டணி உருவானதாலும், பழனிசாமியின் நெருக்கடி காரணமாகவும் பன்னீர்செல்வத்தையும், தினகரனையும் பாஜக தலைமை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.
இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டிய சூழலில் இருக்கும் பன்னீர்செல்வம் அணி, 2026 தேர்தலில் ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தன் பலத்தை நிரூபிப்பதற்காக மதுரையில் மாநாடு நடத்தத் திட்டமிட்டிருந்த பன்னீர்செல்வம், அதனை திடீரென ஒத்திவைத்த நிலையில், தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக புதிய காயை நகர்த்தியிருக்கிறார்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயுடன் கூட்டணிஅமைப்பது குறித்த கேள்விக்கு, அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று சமிக்ஞை கொடுத்திருக்கிறார் பன்னீர்செல்வம். ஏற்கெனவே, பாஜகவின் பாராமுகம் குறித்து பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கருத்து சொன்ன டிடிவி தினகரனும், விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று கூறியிருந்தார். இப்போது டிசம்பரில் எந்த கூட்டணி, எத்தனை சீட்டுகளில் போட்டி என்று சொல்வோம் என அவர் அறிவித்திருப்பதன் பின்னணியில் பல கணக்குகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
தென் தமிழகத்தில் இன்னமும் செல்வாக்கைத் தக்கவைத்திருக்கும் பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் ஒரே நேரத்தில் தவெக பக்கம் நகர்ந்தால், தங்கள் அணி மேலும் பலவீனப்பட்டுவிடும் என்று பாஜக நினைப்பது மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் கருத்துகள் வாயிலாக வெளிப்படுகிறது.
இதுவரையில் இவ்விரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாத தவெக தரப்பு, விஜயின் சுற்றுப்பயணத்துக்கு முன் அதற்கான வேலைகளில் இறங்கக்கூடும் என்று தகவல் வெளியாகியிருப்பதால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது.