கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெஞ்சைவிட்டு அகலாத இந்த துயரச் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறை தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக, தவெகவின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் 3 பேருக்கும் முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்துள்ளது.
தவெகவின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் போன்றோரின் முன்ஜாமீன் மனுக்கள் இன்று மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமாரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக உங்களுக்கு பொதுமக்கள் மீது எதாவது பொறுப்பு இருக்கிறதா இல்லையா? என்ற கேள்வியை எழுப்பியதுடன், வழக்கு விசாரணை தொடக்க நிலையிலேயே இருப்பதால், அதற்கு முன் ஜாமீன் வழங்க இயலாது என்று கூறி வழக்கை முடித்துவைத்தனர்.
இந்தவழக்கில் 2வது குற்றவாளியாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், 3வது குற்றவாளியாக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் இருக்கும் நிலையில், இருவரின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் என சொல்லப்படுகிறது.