கரூரில் நேற்று நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். மேலும், 50க்கும் மேற்ப்பட்டோர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும் நேரிடையாக கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்தார்.
இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறிகையில், "கரூர் துயரச்சம்பவத்தில் 40 அப்பாவிகளை பறிகொடுத்துள்ளோம்; இன்னும் கவலைக்கிடமாய் சிலர் உள்ளனர். அழுகுரல் மட்டுமே கேட்கிறது. தமிழகத்தில் இதற்கு முன் இப்படி நடந்ததில்லை; இனியும் நடக்கக்கூடாது.
இறந்தவர்கள் குடும்பங்களுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்; இதை கருத்தில் கொண்டு கரூர் பாஜக சார்பில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் கொடுக்கப்படும். மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கும் உதவ தீர்மானித்துள்ளோம். தமிழ்நாட்டில் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு சரியான இடம் ஒதுக்கப்படுவதே இல்லை; சரியான அளவில் காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட்டு கூட்டங்கள் கட்டுப்படுத்தப்படுவதும் இல்லை.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள், மெரினா Airforce Show இறப்பு தொடங்கி, தற்போது கரூர் தவெக கூட்டநெரிசல் வரை பல இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவறு நடந்து கொண்டே உள்ளது.
எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீதுதான். முதல் தவறு மாவட்ட நிர்வாகம், காவலர்கள் மீதுதான். அவர்கள் உரிய இடத்தை கொடுக்கவில்லை. வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் நடத்த வாய்ப்பே இல்லையென தெரிந்தபோதும் ஏன் அனுமதி கொடுக்கிறார்கள்?
சரியான இடத்தை கொடுப்பது அரசின் கடமை. முடியவில்லை என்றால், கூட்டத்திற்கு அனுமதியே கொடுக்காதீர்கள். 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்ததாக பொறுப்பு டிஜிபி சொல்கிறார். Striking Force, Guard, வண்டிக்குள் இருந்தவர்களெல்லாம் கணக்கில்லை. களத்தில் 100 பேர்கூட இல்லை. போக்குவரத்து காவலர்களோ, சட்டம் ஒழுங்கு காவலர்களொ போதுமான அளவு களத்தில் இல்லை. கூட்டம் வருமென தெரியும்... அது 10,000-ஓ 20,000-ஓ, 50,000-ஓ... விடுங்க... அதற்கேற்றபடி கீழே களத்தில் எத்தனை பேர் இருந்தனர்?
ஒரு இடத்துக்கு அனுமதி கொடுக்கும் முன் காவல்துறை 1,000 முறை யோசிக்க வேண்டும்; எமெர்ஜென்சி ஆம்புலன்ஸ் போகக்கூட வழியில்லாத வேலுச்சாமிபுரத்துக்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள்? அங்கு ஏதேனும் VVIP இருந்து அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் என்ன செய்திருப்பார்கள்?
எனவே மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரை பணிநீக்கம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் சஸ்பெஷனாவது செய்ய வேண்டும். அரசியல் கட்சிக்காரர்கள் சொல்வதை கேட்கவா ஐபிஎஸ் யூனிஃபார்ம்?
தாமாக முன்வந்து முதல்வரே சிபிஐ விசாரணை வைக்க வேண்டும்; கூட்டத்தை யாரேனும் விஷத்தனமாக தூண்டிவிட்டார்களா? ஆம்புலன்ஸ் எப்போது வந்தது? லத்தி சார்ஜ் நடந்தது ஏன்? மின்தடை நடந்தது ஏன்? செருப்பு வீசப்பட்டது ஏன்? இதையெல்லாம் சிபிஐ நுணுக்கமாக கண்காணித்து, விசாரிக்க வேண்டும். எந்த சந்தேகத்திற்கும் இடம் கொடுக்கக்கூடாது.
பெரம்பலூர், கரூர், திருவாரூருக்கு விஜய் போன்றவொரு சினிமா ஸ்டார் செல்கிறார் என்றால் கிராமத்து மக்கள் அங்கு கூடத்தான் செய்வார்கள். அதுவும் மொத்த மாவட்டத்துக்கு ஒரேயொரு பாயிண்ட்டில்தான் அவர்களை சந்திக்கிறீர்கள். பிற அரசியல் கட்சிகள், ஒரு மாவட்டத்துக்கு 5 பாயிண்ட் வைப்பார்கள்.
நீங்கள் ஒரேயொரு பாயிண்ட்டில், அதிலும் சனிக்கிழமை பார்த்து சந்திக்கும்போது, விடுமுறை தினமென ஆசையில் குழந்தைகளோடுதான் மக்கள் வருவார்கள். விஜய் போன்றோர் இதை யோசித்து செயல்பட வேண்டும்.
நாம் செல்வதால் யாருக்காவது உபத்திரவம் ஆகிறதா என பார்ப்பது கட்சித் தலைவர்களின் கடமை. எந்தவொரு பெரிய கட்சிக்கும், லீடர்ஷிப் டீம் இருக்கும். அதிலுள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள்தான் இப்படியான கூட்டங்களை சரியாக வழிநடுத்தவர்.
தவெக-வில் இப்போதுதான் 2-ம் கட்ட தலைவர்கள் வளர்கிறார்கள். எனவே யார் யாரை கட்டுப்படுத்துவது என யாருக்கும் தெரியவில்லை. வளரும் கட்சிகளுக்கு இப்பிரச்னை இருக்கும்தான். விஜய் இதை உணர்ந்து, Weekend அரசியலில் இருந்து வெளியே வரவேண்டும். முன்பே இதை நாங்கள் சொன்னபோது, மக்களுக்கு உபத்திரவம் கூடாதென்றுதான் சனிக்கிழமை செல்கிறோம் என்றார்கள்.
Weekend-ல் போனால்தான் குழந்தைகள், பெரியவர்கள், பெண்களெல்லாம் வருவார்கள்; அப்படி வந்ததால்தான் இன்று 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். விஜயை நான் நேரடியாக குறைசொல்லவில்லை. இருந்தபோதும் Weekend-களில் இதுபோன்ற மாநாடு தேவையா, ஒரு மாவட்டத்திற்கு ஒரு பாயிண்ட் போதுமா என்றெல்லாம் ஆராய்ந்து செயல்பட வேண்டும்
இரண்டாம் கட்ட தலைவர்கள் உருவாகும் வரை, கட்சியில் சிக்கல்கள் நிலவும்தான். எனவே விஜய் இதை பரிசீலிக்க வேண்டும்; பரிசீலித்து நடவடிக்கை எடுப்பாரென நம்புகிறேன். விஜய்தான் முதல் குற்றவாளி என்பதை நான் ஏற்கமாட்டேன்.
கூட்டத்திற்கு பாதுகாப்பு கொடுப்பது, அனுமதி கொடுப்பது அரசின் கடமை. முடியவில்லையென்றால் அரசு இல்லையென சொல்லலாம். சம்பந்தப்பட்ட கட்சியினர் நீதிமன்றம் சென்று வேறு இடத்தில் அனுமதி வாங்கி கூட்டம் நடத்துவார்கள்
கூட்டத்திற்கு வருவதற்கு விஜய்க்கும், விஜயை பார்ப்பதற்கும் மக்களுக்கும் உரிமை உள்ளது; அந்த மக்களின் எண்ணிகை 1,000 - 10,000 - 10,00,000 என எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இரு தரப்புக்கும் இடையே தரகராக இருந்து பாதுகாப்பு கொடுக்க வேண்டியதுதான் அரசின் வேலை. கரூரில் அதை அரசு செய்யவில்லை. ஒருதலைபட்சமாக செயல்பட்டதற்கு அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்" எனத் தெரிவித்தார்.