விசிக தலைவர் திருமாவளவன், சோழ, பாண்டிய, சேர மன்னர்களை விமர்சித்த கருத்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர், தமிழ் அழிவுக்கு மன்னர்கள் காரணம் என கூறியதற்கு அண்ணாமலை, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்கள் வரலாற்று அறியாமையை வெளிப்படுத்துவதாகவும், தமிழர் பாரம்பரியத்தை அவமதிப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் பரபரப்பாக சுழன்றுகொண்டிருக்கிறது. அனைத்து கட்சி தலைவர்கள், நிர்வாகிகளின் கருத்துகள் கவனிக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிர்தரப்பிலிருந்து பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் ஒருபக்கம் அதிமுக-தவெக தரப்பும், மறுபக்கம் திமுக-காங்கிரஸ் தரப்பும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது விசிக தலைவர் திருமாவளவன் மன்னர்கள் கலாசாராம் குறித்து சொன்ன கருத்து அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் அழிவதற்கும், கலாசாரம் அழிவதற்கும் சோழ, சேர, பாண்டிய, பல்லவ என அனைத்து மன்னர்களுமே காரணம் என்றும், அவர்கள் தான் வடமொழி கலாசாரத்தை பின்பற்றி தமிழை அழித்தார்கள் என்றும் திருமாவளவன் விமர்சித்து பேசியுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு அண்ணாமலை, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ”எந்த அரசன் மீதும் மதிப்பு, யாரையும் பெரிய சக்தியாக பார்ப்பது கிடையாது. அந்த மன்னர்களின் காலத்தில் தான் நாடு குட்டிச்சுவரானது, சமஸ்கிருத மயமானது, இந்துத்துவ மயமானது, கோவில் கருவரையில் இருந்த தமிழ் தூக்கி வெளியில் எறியப்பட்டது எல்லாம் அந்த பாண்டிய, சேர, சோழ மற்றும் பல்லவ மன்னர்கள் காலத்தில் தான்.
தமிழ் பெயர்களை மாற்றி வடமொழி பெயர்களை சூட்டிக்கொண்டவர்கள் அவர்கள், ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா? ராஜேந்திரன் என்பது தமிழ் பெயரா? எல்லாம் வடமொழியிலேயே மயங்கிக் கிடந்தவர்கள். பார்ப்பனர்களின் வேள்வி, யாகங்களில் மயங்கிக் கிடந்தவர்கள்.
அவர்கள் எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும், என் தமிழ் அழிவதற்கும், கலாசாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள். அதனால் ஆண்ட பரம்பரை என்று சொல்வதில் எந்த பெருமையும் இல்லை. அதில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை” என கடுமையாக விமர்சித்து பேசினார்.
சோழ, பாண்டிய மன்னர்களை இழிவுபடுத்திவிட்டதாக எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்திருக்கும் அண்ணாமலை, ”ஊழல் நிறைந்த, இந்துக்களுக்கு எதிரான இந்த திமுக அரசின் கீழ் தமிழ்நாட்டில் எது நடந்தாலும், அதற்கு பாஜக மற்றும் சங்க பரிவாரத்தைக் குறை கூறி வந்த I.N.D.I. கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. திருமாவளவன், இப்போது பத்து நூற்றாண்டுகளுக்கும் பின்னோக்கிச் சென்று, மாபெரும் சோழ மற்றும் பாண்டிய மன்னர்களை அவதூறு செய்துள்ளார். அந்த மன்னர்களின் சிறப்பான ஆட்சியின் கீழ், தமிழ் மொழி இன்றைய தமிழ்நாட்டின் புவியியல் எல்லைகளையும் கடந்து செழித்து வளர்ந்தது.
இத்தகைய கருத்துக்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. இது சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் பாரம்பரியத்திற்கும் பெருமைக்கும் இழைக்கப்பட்ட அவமானம். திரு. திருமாவளவனின் இத்தகைய கருத்து, அவரிடமிருக்கும் வரலாற்று அறியாமையை மட்டுமே வெளிப்படுத்துகிறது.
ராஜ ராஜ சோழன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களா என்று அவர் கேள்வி எழுப்பினால், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, தயாநிதி, கலாநிதி மற்றும் கோபாலபுரம் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களா என்று யாராவது கேட்கக்கூடும்.
தமிழ் மொழியின் உண்மையான வளர்ச்சிக்கும் உலகளாவிய பெருமைக்கும் ஏதாவது அரசியல் குழு சிறிதளவும் பங்களிக்கவில்லை என்றால், அது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள்தான்.
தமிழ்நாட்டின் வரலாறு திமுக தொடங்கப்பட்ட 1949-ல் தொடங்கவில்லை என்பதையும், மாறாக மாநிலத்தின் பல பிரச்சனைகள் அந்த நாளிலிருந்துதான் தொடங்கின என்பதையும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும்” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் கருத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் திரு தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது.
தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.
ராஜராஜன் தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா? என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் திரு தொல்.திருமாவளவன் அவர்கள், முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா? என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா? என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது.
எனவே, திமுகவையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.