’கூட்டணிக்கு வரவேண்டுமென்றால் எம்பி பதவி..’ உதிரி கட்சிகள் டிமாண்ட்.. சிக்கலில் திமுக-அதிமுக!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில், மாநிலங்களவை எம்பி பதவிக்காலம் முடிவடைவதால், திமுக-அதிமுகவுக்கு கட்சிகள் இடையே பதவி பங்கீடு சிக்கலாக உள்ளது. பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தலா ஒரு இடம் கோருவதால், கூட்டணி அமைப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்பிக்களாக பதவி வகிக்கும் திமுகவின் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர் இளங்கோ, டாக்டர் கனிமொழி சோமு ஆகியோர், அதிமுக எம்பி தம்பிதுரை, அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது.
சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், கூட்டணி கணக்குகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சட்டமன்ற கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் திமுகவின் சார்பில் 4 பேரும், அதிமுகவின் சார்பில் 2 பேரும் தேர்வு செய்யப்படுவது உறுதியாகும். 2 இடங்களில் ஒரு இடத்தை பாமக தலைவர் அன்புமணிக்கு தர அதிமுக உறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
இன்னொரு இடத்தைதருமாறு கூட்டணியில் இணைந்துள்ள டி.டி.வி தினகரன், தமாக தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் கோருகின்றனர்.
கூட்டணிக்கு வரவேண்டுமென்றால் எம்பி பதவி..
கூட்டணிக்கு வரவேண்டும் என்றால் ஒரு மாநிலங்களவை பதவி தாருங்கள் என தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதாவும் அதிமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதேநேரம் தேமுதிக., பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் திமுக அணிக்கு வந்தால் அவர்களுக்கு தலா ஒரு இடம்தரப்படலாம் என்று தெரிகிறது.
ஏற்கெனவே கூட்டணியில் உள்ள காங்கிரஸும், விசிகவும் மாநிலங்களவை பதவியை குறிவைக்கின்றன. 4 இடங்களில், யாருக்கு கொடுப்பது யாரை தவிர்ப்பது என தெரியாமல் திமுக தவிக்கிறது. சட்டமன்ற தேர்தல் தொகுதி உடன்பாட்டுடன் மாநிலங்களவை இடமும் கேட்கப்படுவதால் 2 கட்சிகளும் குழப்பத்தில் உள்ளன.

