அண்ணாமலை pt web
தமிழ்நாடு

“தேவையெனில் முதல்வர் வீட்டைக் கூட முற்றுகையிடுவோம்” - அண்ணாமலை

இனிமேல் தேதி சொல்லாமல் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்றும் தேவையெனில் முதல்வரின் வீட்டைக்கூட முற்றுகையிடுவோம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

PT WEB

தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மது உற்பத்தி ஆலை சார்ந்த அலுவலகங்களில் நடத்திய அமலாக்கத்துறை சோதனையில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்திருந்தது.

சென்னை காவல்துறை இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் இன்று காலை முதல் பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக நிர்வாகிகளான வினோஜ் பி.செல்வம், சக்கரவர்த்தி உள்ளிட்டோர் வீடுகளிலேயே வைத்து கைது செய்யப்பட்டனர். மேலும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 11 மணி அளவில் சென்னை நோக்கி வரும் வழியில் நீலாங்கரை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

முன்னதாக வீட்டிலிருந்து போராட்டத்திற்கு கிளம்பிய அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “போராட்டம் செய்யும்போது குரல்வலையை நசுக்க வேண்டுமென நினைக்கிறார்கள். காவல்துறைக்கு இதுதான் வேலையா. இன்று தடுக்கட்டும். அடுத்த ஆர்ப்பாட்டம் தேதி சொல்லாமல் நடக்கும். எதை வேண்டுமானாலும் முற்றுகை செய்வோம். அது முதலமைச்சரது வீடாகவும் இருக்கலாம். ஏனெனில் முதலமைச்சரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார். அவரும் குற்றவாளிதான். ஏனெனில் அவர் தப்பித்துச் செல்லமுடியாது. அவரது அமைச்சரவை, அவரது கண்காணிப்பில் இருக்கும் ஒன்று.. ஒரு அமைச்சருக்கு மட்டும் அதிகளவில் பாசத்தைக் காட்டியுள்ளார்” எனத் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பு முடிந்த பின் டாஸ்மாக் அலுவலக முற்றுகைப் போராட்டத்திற்கு சென்ற அண்ணாமலை அக்கரைப் பகுதியில் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.