ஈரோடு | குடும்பத் தகராறில் குழந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய தந்தை கைது
செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூரைச் சேர்ந்தவர்கள் குமார் (35) - பாண்டிசெல்வி (24) தம்பதியர். இவர்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தையும் ஒன்னேகால் வயதில் இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்று பாண்டிசெல்வி தனது நான்கு மற்றும் ஒன்றேகால் வயது ஆண் குழந்தைகளுடன் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் குமாரும் அவரது ஒன்றேகால் வயது பெண் குழந்தையும் இருந்துள்ளார்.
அப்போது பாண்டிசெல்வி மீது ஆத்திரத்தில் இருந்த குமார், தூரியில் தூங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தையை வேகமாக ஆட்டி விட்டுள்ளார். இதில், உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் தலை சுவற்றில் மோதி மயக்கமடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து மனைவியிடன் குழந்தை மூச்சுப் பேச்சு இல்லாமல் இருப்பதாக குமார் நாடகமாடியுள்ளார். இதையடுத்து குழந்தையின் உடலை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து குமாரிடம் மொடக்குறிச்சி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது குமார், குழந்தையை சுவற்றில் மோதி கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து குமாரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.