கரூர் | திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன் - நல்வாய்ப்பாக உயிர்தப்பிய குடும்பத்தினர்
செய்தியாளர்: வி.பி.கண்ணன்
திருப்பூர் மாவட்டத்திலிருந்து கரூர் மாவட்டம் குளித்தலைக்கு நடைபெறும் சுப நிகழ்ச்சிக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தோரணக்கல்பட்டி என்ற இடத்தில் வந்த போது, ஆம்னி வேன் பின்புறத்தில் திடீரென புகை வந்துள்ளது. இதைக் கண்ட ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் வாகனத்தை நிறுத்தினார்.
இதையடுத்து வேனில் இருந்தவர்கள் அவசரம் அவசரமாக கீழே இறங்கிய நிலையில், தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆம்னி வேனில் பயணம் செய்த திருப்பூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் பத்திரமாக கீழே இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.