திருவள்ளூரில் 10 வயது சிறுமிக்கு அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை குற்றம் நடைபெற்ற நிலையில், காவல்துறையினர் போக்சோ வழக்கு பதிவுசெய்து குற்றவாளியை தேடிவருகின்றனர்.
ஆனால் 7 நாட்கள் ஆகியும் குற்றவாளியை தேடிக்கண்டுபிடிக்க முடியாதது குறித்து உறவினர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
திருவள்ளூரில் கடந்த 12-ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற 10 வயது சிறுமி, மர்ம நபர் ஒருவரால் தூக்கிச்சென்று கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து குற்றவாளியை காவல் துறையினர் தேடி வரும் நிலையில், ஒரு வாரம் ஆகியும் இதுவரை அந்த நபரை கைது செய்யவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
உறவினர்கள் கூறுகையில், காவல் துறையினர் ஒவ்வொரு நாள் வரும் போதும் 2 நாட்கள் கால அவகாசம் கேட்கின்றனர். ஆனால் இதுவரையில் குற்றவாளி கைது செய்யப்படவில்லை. செல்போன் தொலைந்தால் கூட உடனடியாக கைது செய்யும் காவல் துறையினர், சம்பவம் நடந்து இதுவரை 8 நாட்களாகியும் கைது செய்யவில்லை” எனவும் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் கைது நடவடிக்கை காலதாமதமானால் போராட்டம் தொடரும் எனவும் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் வருகை தந்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பங்கேற்ற நிகழ்வில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஏழு நாட்கள் ஆன நிலையிலும், யாரும் சரியான விசாரணை மேற்கொள்ளவில்லை. முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக வாய் திறக்கவில்லை, சாரி என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு போய்விடுவார்.
திமுகவால் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளத்தற்கு இதுவே சான்று” என விமரித்தார்.