பாமகவில் உள்ள உட்கட்சி பிரச்சனைகள் தீவிரமடைந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் தரப்பினர் ஜி.கே. மணியை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர். கட்சிக்கு எதிரான விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக, கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு.
பாமகவில் நிலவி வரும் உட்கட்சி பிரச்னை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தரப்பினர் தனித்தனி தீவாய் மாறி செயல்பட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே தந்தை - மகன் இடையேயான பிளவு, தமிழக அரசியல் களத்தில் நாளுக்குநாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நிர்வாகிகள் நியமனம், ஆலோசனை, பொறுப்புகள் என இம்மோதல் போக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது உச்சத்தை எட்டியது. மேலும் இருதரப்பினர் மோதிக் கொள்ளும் நிலையும் உருவானது. அனைத்திற்கும் மேலாக இப்பிரச்னை நீதிமன்றம் வரை சென்றது. இந்தசூழலில் பா.ம.க கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாசை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
இப்படியான பரபரப்பான சூழலில் தான் அப்பா-பிள்ளைக்கு இடையே விரிசலை உருவாக்கியது ஜிகே மணிதான் என்று அன்புமணி குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருந்த ஜிகே மணி, ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக இணைவார்கள் எனில் கட்சியை விட்டு வெளியேற தயார் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் பாமகவிலிருந்து ஜி.கே.மணியை நீக்கி அன்புமணி தரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாமக அன்புமணி ராமதாஸ் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில், கட்சி விரோத செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருவதால், ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரையின் படி பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து ஜி.கே.மணி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ஜி.கே.மணி அவர்கள் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், அதற்காக கட்சியின் அமைப்பு விதி 30-இன்படி அடிப்படை உறுப்பினரில் இருந்து அவரை ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் கடந்த 18.12.2025-ஆம் நாள் அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தது.
அவருக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜி.கே.மணி அவர்களிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. அதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி இது குறித்து விவாதித்தது. கட்சி விரோத செயல்பாடுகள் குறித்து ஜி.கே.மணி அவர்கள் எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், கட்சியின் அமைப்பு விதி 30-இன்படி அடிப்படை உறுப்பினரிலிருந்து அவரை நீக்கலாம் என்று கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்தது. அதை ஏற்று ஜி.கே.மணி அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (26.12.2025) வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணி அவர்களுடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.