“அப்பா-பிள்ளை உறவை பிரித்தது ஜி.கே. மணிதான்..” - அன்புமணி குற்றச்சாட்டு
பாமகவில் நிலவி வரும் உட்கட்சி பிரச்னை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தரப்பினர் தனித்தனி தீவாய் மாறி செயல்பட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே தந்தை - மகன் இடையேயான பிளவு, தமிழக அரசியல் களத்தில் நாளுக்குநாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நிர்வாகிகள் நியமனம், ஆலோசனை, பொறுப்புகள் என இம்மோதல் போக்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது உச்சத்தை எட்டியது. மேலும் இருதரப்பினர் மோதிக் கொள்ளும் நிலையும் உருவானது. தற்போது இந்த பிரச்னை நீதிமன்றம் வரை சென்றது. பா.ம.க கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாசை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
இந்தசூழலில் அன்புமணி ராமதாஸ் தேர்தல் ஆணையத்தில் தவறான ஆவணங்கள் கொடுத்ததை ஏற்று அதன் அடிப்படையில் அன்புமணி ராமதாசை தலைவராக அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இப்படியான பரபரப்பான சூழலில் அப்பா-பிள்ளைக்கு இடையே விரிசலை உருவாக்கியது ஜிகே மணிதான் என்று அன்புமணி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அப்பா-பிள்ளை உறவை பிரித்தது ஜிகே மணிதான்..
தன்னை பாமக தலைவராக்கிய அடுத்த நாளிலிருந்தே ஜி.கே.மணி சூழ்ச்சி செய்ய தொடங்கி விட்டதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், சூழ்ச்சி செய்து அப்பா-பிள்ளை உறவில் இடைவெளியை உண்டாக்கியதே ஜி.கே.மணிதான் என்று பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மேலும் ராமதாஸை சுற்றி துரோகிகள், தீய சக்திகள் இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ராமதாசுடன் இருப்பவர்கள் அவரை ஏமாற்றுவதாக குறிப்பிட்டார். களத்தில் பாமகவை சந்திக்க, திமுகவுக்கு தைரியம் கிடையாது எனவும் அன்புமணி விமர்சித்தார்.
அன்புமணி வேண்டுமானால் தனிக்கட்சி தொடங்கி கொள்ளட்டும்..
இந்நிலையில் பாமக மற்றும் அன்புமணி குறித்து பேசியிருக்கும் ராமதாஸ், பாமக தான் உருவாக்கிய கட்சி என்றும், வேறொருவருக்கு கட்சியில் உரிமை இல்லை எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்புமணி புதிய கட்சி தொடங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

