பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அதிமுக - பாஜக கூட்டணி உருவான நிலையில், செங்கோட்டையன் - அமித்ஷா சந்திப்பு பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழ்நாட்டில் NDA கூட்டணிக்கு தலைமையாக எடப்பாடி பழனிசாமி இருக்கையில், அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள செங்கோட்டையனுடன் நெருக்கம் காட்டுகிறது டெல்லி பாஜக தலைமை.. இவர்களது சந்திப்பு எடப்பாடி தரப்புக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி என்னவாகும் என்று விரிவாக பார்க்கலாம்.
அதிமுகவில் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மனக்கசப்பு நீடித்து வந்த நிலையில், கடந்த 5ம் தேதி அன்று அனைத்தையும் உடைத்து பேசினார் செங்கோட்டையன். கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “கட்சி ஒன்றுபட வேண்டும். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். பத்து நாட்களுக்குள் கட்சியில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். இல்லையெனில், ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் இறங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
செங்கோட்டையனின் கருத்து அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிய நிலையில், முக்கிய நிர்வாகிகளோடு ஆலோசித்த எடப்பாடி, செங்கோட்டையனின் பொறுப்புகளைப் பறித்தார். இதனால், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் என்பதைத் தாண்டி செங்கோட்டையனிடம் பொறுப்புகள் ஏதும் இல்லை. கட்சி ஒன்றுபட வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்தை சசிகலா, ஓபிஎஸ், டிடிவி மற்றும் புகழேந்தி வட்டாரத்தினர் அனைவரும் ஆதரித்து பேசினர்.
அதே நேரம், செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் பலரின் பொறுப்புகளையும் பறித்தார் எடப்பாடி. மறுபக்கம், செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் சிலர், தாங்களாகவே முன்வந்து பதவிகளை ராஜினாமா செய்தனர். கோபிசெட்டிப்பாளையம் வட்டாரத்தில், செங்கோட்டையனின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து எடப்பாடி நடவடிக்கை எடுக்க, செங்கோட்டையன் ஆதரவு எம்.எல்.ஏவாக பார்க்கப்பட்ட பண்ணாரியும் எடப்பாடிக்கு ஆதரவாக திரும்பினார். இப்படியாக, கட்சி ஒன்றுபட வேண்டும் என்று செங்கோட்டையன் எடுத்த ஆயுதம் அவருக்கு எதிராகவே திரும்பிய நிலையில், 2 தினங்களுக்கு முன்பாக டெல்லி சென்ற செங்கோட்டையன், பாஜக தேசிய தலைமையை சந்தித்து பேசியிருக்கிறார்.
மன நிம்மதிக்காக ஹரித்வார் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற செங்கோட்டையன், மத்திய அமைச்சர்களான அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். சந்திப்பு முடிந்து மீண்டும் சென்னை திரும்பிய அவர், தமிழ்நாடு அரசியல் சூழ்நிலை பற்றி கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாகவும், அனைவரும் ஒன்றிணைய வேண்டும், இயக்கம் வலிமைபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் கருத்துக்களை மத்திய அமைச்சர்களிடம் எடுத்துரைத்ததாகவும் பகிர்ந்தார். அதோடு, இயக்கம் வலிமைபெற்று கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதையும் மத்திய உள்துறை அமைச்சரிடம் எடுத்துரைத்ததாகவும் அவர் கூறிய நிலையில், செங்கோட்டையன் - அமித்ஷாவின் சந்திப்பு இபிஎஸ் தரப்பை கொதிப்பில் ஆழ்த்தியதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
ஆம், பல முட்டல் மோதல்களுக்குப் பிறகு ஒன்றிணைந்த அதிமுக - பாஜக கூட்டணியில், குழப்பமான சூழல் மெல்ல மெல்லத் தெளிந்து வருகிறது. எண்டிஏ ஆட்சிதான் என்று கூறியதை பாஜக நிறுத்திக்கொண்ட நிலையில், எடப்பாடியின் பரப்புரையால், களத்தில் கூட்டணி கெமிஸ்ட்ரி ஓரளவுக்கு ஜெல் ஆகத்தொடங்கியுள்ளது. இப்படியான சூழலில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைமையாக, எண்டிஏ கூட்டணிக்கு தமிழக தலைமையாக எடப்பாடி இருக்கையில், செங்கோட்டையனுக்கு அமித்ஷா நேரம் ஒதுக்கியது விவாதப்பொருளாக மாறியுள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று கூறிய அமிஷ்தா, செங்கோட்டையனுடனான சந்திப்பில் பல விடயங்கள் குறித்து விவாதித்துள்ளார்.
பாஜக தேசிய தலைமை இப்படி செய்யும் என்று நினைக்கவில்லை என்று எடப்பாடிக்கு நெருங்கியவர்கள் குமுறத்தொடங்கியுள்ளனர். கட்சியில் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் செங்கோட்டையனை பாஜக தலைமை சந்தித்து பேசியது, கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது. பாஜகவுடனான கூட்டணிக்கு முன்பு, எடப்பாடியின் சாய்ஸ் ஆக விஜய் தரப்பே இருந்ததாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள். அதிமுகவும் தவெகவும் இருந்தால், 2026ல் ஆட்சி மாற்றமே ஏற்படும் என்றெல்லாம் அரசியல் விமர்சகர்கள் பேசினர். ஏதோ ஒருகட்டத்தில் இருதரப்பும் கூட்டணி குறித்து பேசியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் இன்னமும் இருக்கிறது. இந்த நிலையில், பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டால், அதிமுகவின் பார்வை தவெகதான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
இது தொடர்பாகப் புதிய தலைமுறையிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணியில் இருந்து விலகி செல்கிறாரா என்றால் அதற்கான காலசூழல் இன்னும் வரவில்லை.அதேசமயத்தில் செங்கோட்டையன் டெல்லிக்கு சென்றது எடப்பாடி வட்டாரத்திற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அப்படியே டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து வந்த செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கினால், தன்னை சந்தித்ததால் செங்கோட்டையனை பதவியில் இருந்து நீக்கியிருப்பதாக அமித் ஷா நினைப்பார். ஆனால், கூட்டணி அமைக்கும்போது உட்கட்சி விஷயத்தில் தலையிடமாட்டோம் என்று நிபந்தனையுடன் தான் பாஜக உள்ளே வந்தது; பின் ஏன் சந்தித்துப் பேசினார் என அதிமுகவினர் கேள்வி எழுப்புவார்கள். ஆனால், பாஜகவின் டெல்லி தலைமை ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியால் கூட்டணி பலவீனமடைகிறது என அவர்கள் நினைக்கிறார்கள். உட்கட்சி விஷயத்தில் பாஜக தலையிடுகிறது.. கூட்டணி வேண்டாம் என எடப்பாடி முடிவெடுப்பார் என்றால் அது கடைசிக் கட்டமாகத்தான் நடக்கும். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு இது மிகவும் சிக்கலான இடம்” எனத் தெரிவித்தார்.