கமல்ஹாசன், எடப்பாடி பழனிசாமி pt web
தமிழ்நாடு

ஆம்புலன்ஸ் அரசியல்... அன்றே கணித்தார் கமல்ஹாசன்..! வைரலாகும் வீடியோ

2026 சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக வேலை செய்து வரும் நிலையில், ஆம்புலன்ஸை வைத்து ஒரு புதிய அரசியல் சர்ச்சை உருவாகியுள்ளது.

PT WEB

2026 சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக வேலை செய்து வரும் நிலையில், ஆம்புலன்ஸை வைத்து ஒரு புதிய அரசியல் சர்ச்சை உருவாகியுள்ளது. ஆம்புலன்ஸ் அரசியல் குறித்து அன்றே கணித்தார் கமல்ஹாசன் என்பதுபோல் ஒரு வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, கூட்டம் நிறைந்த பகுதிக்குள் ஒரு ஆம்புலன்ஸ் நுழைந்தது. இதைக் கண்டு எரிச்சலடைந்த பழனிசாமி, "ஆள் இல்லாத ஆம்புலன்ஸ்கள், கூட்டத்திற்கு இடையூறு செய்வதற்காகவே அனுப்பப்படுகின்றன" என ஆவேசமாகக் குற்றம்சாட்டினார்.

பழனிசாமியின் குற்றச்சாட்டை கடுமையாகக் கண்டித்துள்ள மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிரதான சாலைகளில் பழனிசாமி பரப்புரை நடத்துவதால், ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் இடையூறு ஏற்படுவதாக பரஸ்பர குற்றச்சாட்டை முன்வைத்தார்.

சம்பந்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்தரிடம் கேட்டபோது, நோயாளியின் மேல் சிகிச்சைக்காகவே ஆம்புலன்ஸை ஓட்டிச் சென்றதாக கூறினார். தான் தாக்கப்பட்டதாகவும், அடையாள அட்டை பறிக்கப்பட்டதாகவும் கூறி, தனது மனக்குமுறலையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அதிமுக ஐ.டி.விங், கூட்டம் நடத்த முன்கூட்டியே அனுமதி பெற்ற நிலையில், ஆம்புலன்ஸ் செல்ல மாற்று வழி ஏற்பாடுகள் செய்வது வழக்கமான நடைமுறை என்றும், ஆனால், அதிமுக கூட்டத்தில் மட்டும் ஆம்புலன்ஸ் நுழைவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், பழனிசாமி பங்கேற்ற பல கூட்டங்களில் ஆம்புலன்ஸ் புகுந்த காட்சிகளையும் அக்கட்சியின் ஐ.டி.விங் பகிர்ந்துள்ளது.

அன்றே கணித்தார் கமல்ஹாசன்

கமல்ஹாசன்

பரப்புரை கூட்டங்களில் ஆம்புலன்ஸ் செல்வது இது முதல் முறையல்ல.. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நீதி மய்யத் தலைவர் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்திலும் ஆம்புலன்ஸ் புகுந்துள்ளது. அப்போதே ஆம்புலன்ஸ் அரசியல் குறித்து கமல்ஹாசன் பேசியது, தற்போது வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில், “ஆம்புலன்ஸ் வருகிறது அதையும் இவர் கிண்டல் செய்கிறார் என்று சொல்வார்கள். இரண்டு மூன்று முறை வழிவிடுங்கள் வழிவிடுங்கள் என சொல்லி கூட்டமே கலைந்துவிட்டது” எனத் தெரிவித்திருக்கிறார்.

அவசர மருத்துவ சேவைக்கான ஆம்புலன்ஸ் வாகனம், கட்சி பேதமில்லாமல், அனைவரது உயிருக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியது. ஆனால், அரசியல் சர்ச்சையின் மையமாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் மாறியிருப்பது வருத்தத்திற்குரியது.