எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் pt web
தமிழ்நாடு

அதிமுகவில் நீடிக்கும் குழப்பம்.. இபிஎஸ் பதிலும் டிடிவி ரியாக்சனும்.. கடந்த காலங்களில் நடந்தது என்ன?

ஜெயலலிதா மறைவிற்குப் பின் சில பேர் நம் கட்சியை கபளீகரம் செய்ய பார்த்தார்கள். ஆட்சியை கவிழ்க்க பார்த்தார்கள். அதை மத்தியில் இருப்பவர்கள்தான் காப்பாற்றிக் கொடுத்தார்கள் என எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

Rajakannan K

சென்னை வடபழனியில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, “ஜெயலலிதா மறைவிற்குப் பின் சில பேர் நம் கட்சியை கபளீகரம் செய்ய பார்த்தார்கள். ஆட்சியை கவிழ்க்க பார்த்தார்கள். அதை மத்தியில் இருப்பவர்கள்தான் காப்பாற்றிக் கொடுத்தார்கள். அதற்காக நன்றியோடு நாங்கள் இருக்கிறோம்” என்று கூறியதுதான் தற்போதைய தமிழ்நாடு அரசியலின் ஹாட் டாப்பிக். இபிஎஸ் பேச்சுக்கு உடனடியாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் பதிலடி கொடுத்திருக்கிறார். நடந்தது என்ன விரிவாக பார்க்கலாம்.

எடப்பாடி பழனிசாமிக்கு தினகரனின் பதிலடியை பற்றி பார்ப்பதற்கு முன், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் என்ன நடந்தது என்பதை சுருக்கமாகப் பார்க்கலாம். அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா, 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். ஜெயலலிதா மறைந்தது முதல் அதிமுகவில் அதிரடியாக மாற்றங்களும் உட்கட்சி பூசல்களும் அரங்கேறிய வண்ணம் இருந்தன. அது தற்போது வரை தொடரவும் செய்கிறது. ஜெயலலிதா மறைந்த அதே நாளில் உடனடியாக ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். அதற்குமுன்பும் இரு சமயங்களில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர் எனும் முறையில் குறுகிய காலங்கள் ஓபிஎஸ் முதல்வராக இருந்திருக்கிறார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆனால், அப்போதோ அதிமுக அடுத்தடுத்த மாற்றங்களுக்கு உடனடியாக தயாரானது. ஜெயலலிதா மறைந்த டிசம்பர் மாத இறுதியில் அவரது நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். அதாவது, முதல்வராக பொறுப்பேற்பதையொட்டியே அவர் பொதுச் செயலாளராக ஆக்கப்பட்டார். இதற்கிடையில் டிடிவி தினகரனும் சசிகலாவால் துணைப் பொதுச் செயலாளராக ஆக்கப்பட்டார்.

இத்தகைய சூழலில்தான், ஓபிஎஸ் மனநிலையில் சற்றே மாற்றம் நிகழ தொடங்கியது. இருப்பினும், 2017ம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி அனைத்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம். அதற்கிடையில், அப்போதைய ஆளுநர் வித்யாசாகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்த ஓபிஎஸ் மறுநாளே தர்மயுத்தத்தை தொடங்கினார். தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று சொன்னார். அன்று ஓபிஎஸ்ஸின் தர்மயுத்தம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஓ பன்னீர்செல்வம்,. தர்மயுத்தம்

ஓபிஎஸ் ஏதோ ஒரு புயலை கிளப்பபோகிறார் என்றெல்லாம் அரசியல் பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். அவருக்கு சாதகமாக புதிய முதலமைச்சராக சசிகலாவை அறிவிப்பதைத் தாமதப்படுத்தினார் வித்யாசாகர். அதாவது, சசிகலா மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் வழக்கின் தீர்ப்புக்காக அவர் காத்திருந்ததாக சொல்லப்பட்டது. தொடர்ந்து, பிப்ரவரி 14, 2017 அன்று, சசிகலா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, சரணடைய 24 மணிநேரம் அவகாசம் வழங்கப்பட்டது.

நீதிமன்றம் கொடுத்த அந்த 24 மணி நேரத்தில்தான் அதிரடியான மாற்றங்கள் நடந்தேறின. தீர்ப்பு வந்ததால் முதலமைச்சர் பதவிக்கான சசிகலாவின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தது. ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிலரை தவிர்த்து அனைவரையும் கூவத்தூரில் வைத்து சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினர். சசிகலா பொதுச்செயலாளராக கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் குழுவைக் கூட்டினார். அங்கு எடப்பாடி கே. பழனிசாமி புதிய முதலமைச்சராக ஒருமனதாக நியமிக்கப்பட்டு மறுநாள் பதவியேற்றார். பின்னர் சசிகலா சிறை சென்றார்.

எடப்பாடி பழனிசாமி, சசிகலா

சசிகலா சிறை சென்ற பிறகும் அதிமுகவில் குழப்பங்கள் நீடித்துக் கொண்டே இருந்தன. ஓபிஎஸ் தனி அணியாக செயல்பட்டார். மீண்டும் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடந்தேறின. ஆனால், நிபந்தனையாக சசிகலா நீக்கம் முன் வைக்கப்பட்டது. அதன்படியே இரு அணிகளும் இணைந்தன. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸூம் இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸும் இருந்தனர். துணைப்பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் இபிஎஸ்-க்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். 19 எம்.எல்.ஏக்களுடன் ஆளுநரின் இபிஎஸ்-ஐ நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பின்னர், சபாநாயகரால் டிடிவி ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சியை உருவாக்கி அதற்கு பொதுச் செயலாளர் ஆனார்.

இதற்கிடையில் கட்சிக்கு ஓபிஎஸ், ஆட்சிக்கு இபிஎஸ் என இருவரும் ஆட்சியை கொண்டு சென்றார்கள். ஆட்சியை இபிஎஸ் சிறப்பாகவே நிறைவு செய்தார். பின்னர் அணிகள் இணைந்தாலும் மணங்கள் இணையவில்லை என்ற நிலை உருவானது. மீண்டும் ஓபிஎஸ் வெளியே சென்றார் அல்லது வெளியேற்றப்பட்டார். இபிஎஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். ஒற்றைத் தலைமை ஆகவும் உருவானார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ. ப்ன்னீர்செல்வம்

ஓபிஎஸ் அதிமுக உரிமை மீட்பு கழகம் ஒன்றை உருவாக்கி அதில் பயணித்து வருகிறார். இதற்கிடையில் சசிகலா சிறையில் இருந்து வந்த புதிதில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பின்னர் அவரும் அமைதியாக ஆனார். அவ்வப்போது வெளியே வந்து செய்தியாளர் சந்திப்பையும், தனது ஆதரவாளர்களை மட்டும் சந்திக்கிறார். முதலில் பாஜகவை எதிர்த்த டிடிவி தினகரன் பின் அக்கட்சி உடனேயே கூட்டணியும் வைத்து, சமீபத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறார். தற்போது அதிமுகவில் புதிய புயலாக செங்கோட்டையன் கிளம்பி அதிமுக ஒருங்கிணைப்பை பற்றி பேசி வருகிறார். அவரது பதவிகள் பறிக்கப்பட்ட பிறகும் டெல்லிக்கு சென்று பாஜக தலைவர்களை சந்தித்து வந்துள்ளது பேசுபொருளாக இருக்கிறது.

இந்த விவகாரத்தில், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவை காப்பாற்றியது பாஜகதான் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பதுதான் விவாதப் பொருளாக வெடித்துள்ளது. இந்நிலையில்தான், தனக்கு சிக்கலை உருவாக்கி வரும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகிய மூவருக்கும் தனது பேச்சில் பதிலடி கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதாவது, சென்னையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இபிஎஸ், “அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் சரி.. இப்போதும் சரி... மத்தியில் இருப்பவர்கள் யாரும் நமக்கு எந்த அச்சுறுத்தலும் தரவில்லை. நமக்கு நன்மைதான் செய்தார்கள்” என்று கூறியதோடு, “ஜெயலலிதா மறைவிற்குப் பின் சில பேர் நம் கட்சியை கபளீகரம் செய்ய பார்த்தார்கள். ஆட்சியை கவிழ்க்க பார்த்தார்கள். அதை மத்தியில் இருப்பவர்கள்தான் காப்பாற்றிக் கொடுத்தார்கள். அதற்காக நன்றியோடு நாங்கள் இருக்கிறோம்” என்று கூறினார்.

டிடிவி தினகரன்

கூடவே, “புனிதமாக இருக்கின்ற அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்கள்... அப்படிப்பட்டவர்களை கட்சியில் சேர்க்கணுமா? தலைமைக்கழகம் தொண்டனின் சொத்து” என ஓபிஎஸ் தரப்புக்கும், “அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதற்கு 18 எம்எல்ஏக்களை கடத்திக்கொண்டு சென்றார். அப்படிப்பட்டவர்களையும் கட்சியில் சேர்க்கணுமா? இதையெல்லாம் யார் ஏற்றுக்கொள்வது” என்று டிடிவி தினகரனுக்கு பதிலடி கொடுத்தார்.

இபிஎஸ் நேற்று பேசியது விவாதப்பொருளாக மாறிய நிலையில் இன்று டிடிவி தினகரன் உடனடியாக அதற்கு பதில் கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றியது பாஜக அல்ல, அதிமுக எம்.எல்.ஏக்கள்தான் என்று கூவத்தூரில் நடந்ததை ஓட்டி விரிவாக பேசினார்.

ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையனுக்கு பதில் கொடுத்த இபிஎஸ், உடனடியாக டெல்லிக்கும் சென்றுள்ளார். பாஜகவுக்கு பாராட்டு பத்திரம் வாசித்துவிட்டே டெல்லிக்கு செல்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.