அதிகரிக்கும் நாய்க்கடி சம்பவங்கள்.. மக்கள் உடனே செய்ய வேண்டியது என்ன?
நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனே செய்ய வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் நாய்க்கடி என்பது முக்கியப் பிரச்னையாக மாறி வருகிறது. நாய்க்கடி தொடர்பான தரவுகள், பிரச்னையின் தீவிரத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளன. இந்த நிலையில், வெறிநாய்க்கடி உயிர்க்கொல்லி நோயாக இருந்தாலும்கூட, இன்னமும் அதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் மக்கள். நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனே செய்ய வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. நாய் கடித்தவுடன் சிறிதும் தாமதிக்காமல், கடித்த பகுதியை சோப்பு மற்றும் சுத்தமான ஓடும் நீரில் குறைந்தது 10 முதல் 15 நிமிடங்களுக்கு நன்றாக கழுவ வேண்டும். இது கிருமிகள் பரவுவதைத் தடுக்கும். ஆல்கஹால் அல்லது வீட்டில் இருக்கும் கிருமிநாசினியைப் பயன்படுத்தி நாய் கடித்த இடத்தை நன்றாக துடைக்க வேண்டியதும் அவசியம். இவை எல்லாம் வெறும் முதலுதவி மட்டும்தான். காயத்தை சுத்தம் செய்த கையோடு அருகில் இருக்கும் அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்குச் சென்று ரேபிஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
காயம் ஆறிவிட்டது, வலி இல்லை என்பதற்காக எல்லாம் சரியாகிவிட்டது என்று அலட்சியம் காட்டக்கூடாது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர் ரேபிஸ் தடுப்பூசியின் அனைத்து தவணைகளையும் தவறாமல் செலுத்திக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் நாய் கடித்த காயம் மீது எண்ணெய், மை, மிளகாய், சுண்ணாம்பு உள்ளிட்ட எந்தப் பொருளையும் தடவக்கூடாது. நாய்க்கடிக்கு கை மருத்துவமோ, மூடநம்பிக்கை சடங்குகளோ எந்தப் பலனையும் தராது. நாய் கடித்த உடனே அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுக வேண்டும் என்று மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறையும் சுட்டிக்காட்டி இருக்கிறது. வருமுன் காக்கும் நடவடிக்கையாக வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு முறையாக தடுப்பூசி போடுவதும், வீட்டு நாய்களோ, தெருநாய்களோ நம்மைக் கடிக்காமல் தற்காத்துக்கொள்வதும் மிக அவசியம்.