புதிய கொடியை அறிமுகம் செய்த மல்லை சத்யா.. விரைவில் புதிய கட்சி?
மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, காஞ்சிபுரத்தில் புதிய கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
வாரிசு அரசியலுக்கு எதிராக திமுகவிலிருந்து பிரிந்த வைகோ, மதிமுகவைத் தொடங்கிய காலம் தொட்டே பயணித்தவர் மல்லை சத்யா. கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்ற பெரிய பொறுப்பில் இருந்தவர். கட்சியில் வைகோவின் மகனான துரை வைகோவின் செல்வாக்கை விரும்பாத மல்லை சத்யா, அதே வாரிசு அரசியலைக் காரணம் காட்டி போர்க்கொடி உயர்த்தினார். தொடக்கத்தில் இருதரப்புக்கும் இடையே சமாதானம் பேசிய வைகோ, ஒருகட்டத்தில் மல்லை சத்யாவுக்கு விடை கொடுக்க முடிவெடுத்தார்.
”விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததுபோல் மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்துவிட்டார்” என்ற கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார் வைகோ. ”மூன்று முறை வைகோவின் உயிரைக் காப்பாற்றிய தனக்கு துரோகிப் பட்டமா” என அதிர்ந்த மல்லை சத்யா, ஊடக பேட்டிகளில் தேம்பித்தேம்பி அழுதார். அதேநேரத்தில், மிக விரைவில் மாற்றி மாற்றி வைகோவும், சத்யாவும் சாடிக்கொண்டனர். இந்த அனல் ஓயாத நிலையில், உட்கட்சியில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தன்னுடைய ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார் மல்லை சத்யா. தொடர்ந்து, முக்கியமான காலகட்டங்களில் வைகோ எடுத்த முடிவுகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் மல்லை சத்யா.
இதனையடுத்து, கட்சிப் பொறுப்பில் இருந்து மல்லை சத்யாவை தற்காலிமாக நீக்கிய வைகோ, 15 நாட்களில் அவர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் கடிதம் அனுப்பினார். இதற்கு விளக்கமளித்து மல்லை சத்யா பதில் அனுப்பினார். ஆனால், அந்த விளக்கத்தில் திருப்தி இல்லை எனக்கூறி கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி, மல்லை சத்யாவை மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார். மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டது குறித்து பேசிய மல்லை சத்யா, ”ஆதரவாளர்களைச் சந்தித்து ஜனநாயகபூர்வமாகப் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன்” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, காஞ்சிபுரத்தில் புதிய கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி உள்ளார். மதிமுகவில் இருந்து ஏற்கெனவே விலகிய முன்னாள் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, நாஞ்சில் சம்பத், ‘பொடா’ செவந்தியப்பன், ‘பொடா’ அழகுசுந்தரம் உள்ளிட்டோர் முன்னிலையில் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது பேசிய அவருடைய ஆதரவாளர் வல்லம் பஷீர், ”மல்லை சத்யா தொடங்கும் புதிய கட்சி அல்லது அமைப்பின் பெயர் நவம்பர் 20 ஆம் தேதி அறிவிக்கப்படும்” என தெரிவித்தார். விழாவில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்ட நினைவுச் சின்னத்தில், திராவிட குடியரசு விடுதலைக் கழகம் என்ற பெயர் இருந்ததால், அதுவே கட்சிப் பெயராக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.