எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் pt web
தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு: “எம்ஜிஆர் காலத்தில் இப்படி இல்லை”; ஓபிஎஸ் மீண்டும் இணைவாரா? என்ன நடக்கிறது?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தொடங்கியுள்ளது அதிமுக பொதுக்குழு கூட்டம். நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி, உட்கட்சி மோதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அங்கேஷ்வர்

சென்னை வானகரத்தில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி, உட்கட்சி மோதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

ஏற்கனவே செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களையும் சேர்த்து 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. 2026 தேர்தலில் ஆட்சியமைப்பதற்கான வியூகங்கள் தொடர்பான முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. வெள்ள நிவாரணம், டங்க்ஸ்டன் சுரங்க உரிமம் ரத்து தொடர்பான தீர்மானங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.

கட்சியின் விளம்பரங்கள் சொல்வதென்ன?

மூத்த பத்திரிக்கையாளர் ஷ்யாம் அதிமுக பொதுக்குழு தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியிடம் பிரத்யேகமாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, ஆண்டுக்கு இரு முறை செயற்குழு கூடுவதும், ஒரு முறை பொதுக்குழு கூடுவதும் கட்டாயம் செய்யப்பட வேண்டும். என்னைப் பொருத்தவரை அதிமுக தற்போது முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. கட்சி ஒற்றுமைப்பட வேண்டும் அப்போதுதான் வெற்றி சாத்தியம் என்பது அதிமுகவில் ஒருதரப்பின் குரல்.

தராசு ஷ்யாம்

மற்றொரு தரப்போ, கட்சியில் இருந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால், அதனால் ஏற்படும் கெடு விளைவுகள் அதனால் கட்சிக்கு மீண்டும் பின்னடவை ஏற்படுத்தும், அதிகார மையங்கள் உருவாகும். எனவே, இதே பாணியில் கட்சி பயணிக்க வேண்டும் என தெரிவிக்கிறது.

அதிமுக கூட்டத்தில் 26 தீர்மானங்கள்

நேற்றைக்கு கட்சி நிர்வாகிகள் வெளியிட்டிருந்த விளம்பரங்களை எல்லாம் பார்த்தால், அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் பயணிக்க வேண்டும் என்ற முடிவுக்குத்தான் ஆதரவு அதிகம் இருக்கும் என்பதுபோல தெரிகிறது. அதாவது அதிலுள்ள வர்ணனைகள் எல்லாம் பார்த்தால், கட்சிக்கு நிரந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் மிகத்திறமையான பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இருக்கிறது.

எம்ஜிஆர் காலத்தில்கூட இப்படி இல்லை..

நிரந்தர பொதுச்செயலாளர் என அழைக்கப்பட்டது ஜெயலலிதா மட்டும்தான். எம்ஜிஆர் கூட நிரந்தர பொதுச்செயலாளர் என அழைக்கப்படவில்லை. அவரது காலக்கட்டத்தில், ஆட்சிக்கு எம்ஜிஆர் முதலமைச்சர், கட்சிக்கு நாவலர் நெடுஞ்செழியன் தான் பொதுச்செயலாளர். இதனைஅடுத்து தான் கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒருவர் என்ற முறையில் எம்ஜிஆர் இரு பொறுப்புகளையும் ஏற்றார். ஜெயலலிதா கைகளுக்கு கட்சி வந்தபின் அவர்தான் முதலமைச்சர் அவர்தான் பொதுச்செயலாளர்.

ஓபிஎஸ்-இபிஎஸ்

தற்போது கூட்டப்படும் பொதுக்குழுவில் ஓபிஎஸ் மீண்டும் கட்சியில் இணைய வேண்டுமா? என்பது தொடர்பான விவாதங்கள் மிகப்பெரிய அளவில் வராது என்றுதான் நினைக்கின்றேன். அதற்குப்பதிலாக இபிஎஸ்க்கு முழு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம். மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான கண்டனங்கள் இருக்கும். மேலும், இந்த பொதுக்குழு, இபிஎஸ்க்கு மேலும் வலு சேர்ப்பதற்கும், அவருக்குக் கீழ்தான் கட்சி இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில்தான் இருக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா பொறுப்புகளையும் வழங்கும்போது, கட்சிக்கு வெற்றியைத் தேடித்தர வேண்டிய கட்டாயத்தில் இருப்பார். எனவே அவரது பொறுப்பு இருமடங்கு அல்லது மும்மடங்காக உயர்கிறது என்றுதான் பொருள்” எனத் தெரிவித்தார்.

பொதுக்குழுவில் பங்கேற்க 3000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 10000 பேருக்கு உணவு தயாரிக்கப்படுகிறது. அதில், 8 ஆயிரம் பேருக்கு அசைவ உணவு தயாராகும் நிலையில், 2 ஆயிரம் பேருக்கு வழங்கும் வகையில் சைவ உணவும் தயாரிக்கப்படுகிறது.