செங்கோட்டையன் pt web
தமிழ்நாடு

அதிமுகவில் புயல் | செங்கோட்டையனுக்காக களமிறங்கும் ஆதரவாளர்கள்.. தொடர்ச்சியாக விலகும் நிர்வாகிகள்!

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் இணைக்க கட்சித் தலைமைக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடுவிதித்திருந்த நிலையில், அதிமுகவில் அடுத்தடுத்த நிகழ்வுகள் படுவேகமாக நிகழ்ந்து வருகின்றன.

PT digital Desk

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் இணைக்க கட்சித் தலைமைக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடுவிதித்திருந்தார். இல்லையெனில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை தாம் தொடரப் போவதாகவும் அவர் கூறியிருந்தார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

செங்கோட்டையன் அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பது இதன்மூலம் உறுதியான நிலையில், அடுத்தக்கட்டம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி திண்டுக்கலில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனைக்கு பிறகு அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், கட்சியின் அமைப்பு செயலாளர் பொறுப்பு, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். இதேபோன்று, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் கட்சி பொறுப்பில் இருக்கும் செங்கோட்டையனின் ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டன. தனது பதவி நீக்க விவகாரம் தொடர்பாக பேசிய செங்கோட்டையன், இதனை எதிர்பார்க்கவில்லை எனவும், ஜனநாயக முறைப்படி தனது கருத்தைகேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் தெரித்திருந்தார்.

இத்தகைய நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'ஒன்றிணைவோம், வெற்றிபெறுவோம்' என பல்வேறு மாவட்டங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, காஞ்சிபுரம், நெல்லை, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அதிமுகவினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதேசமயத்தில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக தங்களது பதவிகளை பல்வேறு அதிமுக தொண்டர்களும் ராஜினாமா செய்து வருகின்றனர். செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்டோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருக்கின்றனர். தங்களது பதவியை ராஜினாமா செய்த ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் தங்களது ராஜினாமா கடிதத்தை கடிதம் மூலம் தலைமைக்கு அனுப்பும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் செங்கோட்டையனின் ஆதரவாளர் முன்னாள் எம்பி சத்தியபாமாவின் பதவியை பறித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதிமுக செயற்குழு பொறுப்பில் இருந்து சத்தியபாமா நீக்கப்பட்டிருக்கிறார். அதேபோல் சத்தியபாமா வகித்து வந்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டிருக்கிறது. சத்தியபாமா செங்கோட்டையனுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அதிமுகவில் தன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என்றும் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் சத்தியபாமா தெரிவித்திருந்தார். மேலும், அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்களின் எண்ணங்களை செங்கோட்டையன் பிரதிபலித்துள்ளார் என்றும் 2026 தேர்தலில் அதிமுக வென்றால்தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை நிறைவேற்றலாம் என்றும் சத்தியபாமா தெரிவித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி தலைமை மீது அதிருப்தியில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்களை மீண்டும் இணைத்து தேர்தலை சந்திப்பதே அதிமுகவின் வளர்ச்சிக்கு நல்லது என நிர்வாகிகள், தொண்டர்கள் கருதுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.