”நயினார் நாகேந்திரன் தான் முக்கிய காரணம்..” - டிடிவி தினகரன் அதிரடி பேச்சு
நாளுக்குநாள் தமிழக அரசியல் களம் மிக வேகமாகச் சூடு பிடிக்கிறது. பாஜகவின் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேறியதை தொடர்ந்து, அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் உறவை முறித்துக்கொண்டு வெளியேறியிருக்கிறார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி உறவுகொண்ட நாள் முதலாக படிப்படியாக இற்றுப்போன பாஜக – அமமுக உறவு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் கூட்டணியிலிருந்து வெளியேறியது குறித்து பேசியிருந்த டிடிவி தினகரன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்தினின் செயல்கள் ஆணவம் நிறைந்ததாக உள்ளது என குற்றஞ்சாட்டி பேசியிருந்தார்.
தினகரன் குற்றச்சாட்டுக்கு நயினார் பதில்..
ஓ.பன்னீர்செல்வத்தை பிரதமர் மோடி சந்திக்காத விவகாரத்தில் நயினார் பதில் ஆணவமானது என டிடிவி தினகரன் விமர்சித்தார். பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி வந்தபோது அவரை சந்திக்க நேரம் கேட்டு ஓ.பன்னீர்செல்வம் குறுஞ்செய்தி அனுப்பியிருந்த நிலையில், அதனை நயினார் நாகேந்திரன் மறுத்திருந்தார். அது தொடர்பாக தொலைபேசியில் அழைத்து விசாரித்தபோது நயினார் நாகேந்திரன் முறையாக பதில் அளிக்கவில்லை என்றும் தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமமுக குறித்தும் டிடிவி தினகரன் குறித்தும் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், துக்கடா கட்சி எனஅமமுகவை தாங்கள் நினைக்கவில்லை என்றும், ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி தினகரனும் சொல்லி வைத்துக்கொண்டு குற்றம்சாட்டுகிறார்களா எனதெரியவில்லை எனவும் கூறினார்.
அமித் ஷாவால் அதிமுகவை ஒருங்கிணைக்க முடியாததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியதாக டிடிவி தினகரன் தெரிவித்தது குறித்துசெய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமித் ஷாவை ஏன் வம்புக்குஇழுக்கிறார்கள், அவர் எங்கேயாவது அப்படிசொல்லியிருக்கிறாரா எனவும் நயினார் நாகேந்திரன் கேட்டார்.
மேலும் வேறு சூழ்நிலைகள் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் வெளியதற்கு, தான் பொறுப்பாக முடியாது எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நயினார் தான் வெளியேறியதற்கு காரணம்..
கூட்டணியிலிருந்து வெளியேறியதற்கு நான் காரணமில்லை என்று நயினார் பதிலளித்திருந்த நிலையில், அதுகுறித்து இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசினார் டிடிவி தினகரன்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அகம்பாவத்தில் பேசுகிறார். நாங்கள் கூட்டணியிலிருந்து வெளியேறியதற்கு முக்கிய காரணமே நயினார் நாகேரந்திரனின் செயல்பாடுகள்தான். பழனிசாமியும், அவரை சேர்ந்தவர்களும் எங்கள் கட்சியை அழிப்பதற்கு முயற்சிக்கிறார்கள், எங்கள் நிர்வாகிகளை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.
பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படும்பட்சத்தில் எங்களால் ஏற்க முடியாது. வேறு யாராவது ஒருவர் இருந்தால்கூட எங்களுக்கு பிரச்னையில்லை. பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருந்தால் நாங்கள் எப்படி தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர முடியும். அதனால்தான் வெளியே வந்துவிட்டோம்.
எங்களை அழித்துக்கொண்டு நயினார் ஜெயிப்பதற்கு நாங்கள் முட்டாள் இல்லை. யாரை எதிர்த்து.. எந்த துரோகத்தை எதிர்த்து கட்சிஆரம்பித்தோமோ அவர்களோடு நாங்கள் நிற்கணும் என்று நயினார் எதிர்பார்த்தால், கூட்டணிக்கு நாங்கள் வருவதை நயினார் விரும்பவில்லை என்பதைத்தான் காட்டுகிறது” என்று பேசியுள்ளார்.