அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் சென்னையை அதிரவைத்தது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். காவல்துறையினரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு வரும் 8ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டது. அவர் ஏற்கெனவே பல குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுவந்ததும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் விபரங்கள் இருந்த FIR நகல் இணையதளங்களில் பரவியது பலரது கண்டனங்களைப் பெற்றுள்ளது. பாலியல் வன்கொடுமை, பாலியல் சீண்டல் மற்றும் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களது விபரங்களை வெளியிடக் கூடாது என்பது சட்டம். அதையும் மீறி வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும். ஆனால், தற்போது பாதிக்கப்பட்ட மாணவியின் விபரங்கள் FIRல் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதன் நகல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட FIR விவரங்களை யாரும் பார்க்கவோ, தரவிறக்கம் செய்யவோ முடியாதபடி முடக்கியுள்ளது காவல்துறை.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் கடும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அதிமுகவினர், பாஜகவினர் போராட்டங்களை நடத்தி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, “ஞானசேகரனை 5 முதல் 6 மணி நேரத்திற்குள் கைது செய்துவிட்டோம். காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துவிட்டது. தவறை மறைப்பதற்கான அவசியம் திமுகவிற்கு இல்லை. அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை.
அதிமுக ஒன்றும் யோக்கியமான கட்சி இல்லை. அவர்கள் குற்றங்களை மறைக்க முயற்சித்தார்கள். பாஜகவைப் பொறுத்தவரை, அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பல சம்பவங்களைக் குறிப்பிட முடியும்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2022 ஆம் ஆண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை லட்சத்திற்கு 65 என்றால், தமிழ்நாட்டில் லட்சத்திற்கு 24 தான். பாலியல் வன்புணர்வு வழக்குகளின் தேசிய சராசரி 4.6.. தமிழ்நாட்டில் 0.7 தான். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் குற்றங்களை கட்டுப்படுத்தியுள்ளதுதான் சாதனை” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக பேச அதிமுக செய்தித்தொடர்பாளர் சிவசங்கரியைத் தொடர்பு கொண்டோம். அவர் கூறுகையில், “அமைச்சர் ரகுபதியின் பேட்டியை ஒவ்வொரு முறையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம். அவர் கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமல்தான் பேசுகிறார். குற்றவழக்குகள் குறைவாக இருக்கிறது என்கிறார். நீங்கள் FIR பதிவே செய்யவேயில்லை என்றால் எப்படி எண்ணிக்கை காட்டும்.? பாதிக்கப்பட்டவர்கள் தினம் தினம் சாலைகளுக்கு வந்து போராட்டம் செய்கிறார்கள், எதிர்க்கட்சிகள், தோழமைக் கட்சிகளே போராட்டம் செய்கிறார்கள். திமுக வந்த பின் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது என நாடாளுமன்றத்திலேயே பதிவாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்கிறது. சிசிடிவி காட்சிகள் இல்லை என்று சொல்கிறார்கள். இந்த அரசு வெட்கித் தலைகுனிய வேண்டாமா? இவர்கள் தவறை ஏற்றுக்கொண்டு அதைத் திருத்த வேண்டும் அல்லது சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். 2006 மற்றும் 2011 காலக்கட்டத்தில் காவல் நிலையத்திலேயே கட்டப்பஞ்சாயத்துகள் நடக்கிறது என்பதால்தான் மக்கள் 10 ஆண்டுகள் திமுகவை ஒதுக்கிவைத்தார்கள். இப்போது மீண்டும் அதே அமைச்சர்களும், கவுன்சிலர்களும் காவல்நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள்” என்றார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரங்கள் அடங்கிய FIR நகல் இணையத்தில் வெளியானது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனது பெயரைத் தெரிவிக்க சென்னை காவல்துறை 6 மணி நேரம் எடுத்துக்கொண்டது. 11 மணியளவில் அந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் குறித்தான எந்த விபரங்களையும் சென்னை காவல்துறை வெளியிடவில்லை. மாலை 5 மணிக்குத்தான் அந்த நபரது விபரங்கள் வெளியிடப்பட்டன. ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரங்களை ஒரே நாளில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்” என்றார்.
இணையத்தில் பரவிய பெண்ணின் புகார் தொடர்பான நகல், முடக்கம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக பேசிய சிவசங்கரி, “இந்த லட்சனத்தில்தான் அரசு இருக்கிறது. ஒன்றியம், ஆளுநர் என இதையே பேசிக்கொண்டு, வாக்களித்த மக்களுக்கும் உண்மையாக இல்லை. அவர்கள் யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.