டங்ஸ்டன் விவகாரம் : திமுக எதிர்க்கவில்லையா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் Vs துரைமுருகன் பதில்!
டங்ஸ்டன் விவகாரம் தொடர்பான மத்திய அரசின் விளக்கம், திமுக அரசின் பொய்களை நாடகங்களை வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், சுரங்க குத்தகையை மாநில அரசுதான் வழங்க வேண்டும் என்பதால் மத்திய அரசின் வீண் முயற்சிக்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி, “மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான நில தரவுகளை அனுப்பிய திமுக அரசு, ஏலம் நடத்த எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை என மத்திய அரசு தெளிவு படுத்தி உள்ளது. 10 மாதங்களில் ஒருமுறைகூட எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? சட்டமன்றத்திலும், ஊடகத்தின் வாயிலாகவும் இதைத்தான் தொடர்ந்து திமுக அரசிடம் கேட்டுக் கொண்டு இருந்தோம். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மடைமாற்ற அரசியல் மட்டுமே செய்து வருகிறார். மேலூர் மக்களுக்கு திமுக அரசு இழைத்துள்ள மாபெரும் துரோகத்திற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “டங்ஸ்டன் ஏலத்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக் காட்டியது. அரிட்டாபட்டியில் பல்லுயிர் தளம் உள்ளதை தெரிந்த மத்திய அரசு சுரங்கத்திற்காக ஏலம் விட்டுள்ளது. சுரங்க குத்தகையை மாநில அரசுதான் வழங்க வேண்டும் என்பதால் மத்திய அரசின் வீண் முயற்சிக்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. முதலமைச்சரின் கடிதத்திற்கு பிறகுதான் திட்டத்தை மறுஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கருதி இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.