அண்ணா பல்கலை... வலைதளத்தில் பரவும் பெண்ணின் விவரம்.. யார் பொறுப்பு?
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் சென்னையை அதிரவைத்தது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். காவல்துறையினரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு வரும் 8ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதிக்கப்பட்டது. அவர் ஏற்கனவே பல குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுவந்ததும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் விபரங்கள் இருந்த FIR நகல் இணையதளங்களில் பரவியது பலரது கண்டனங்களைப் பெற்றுள்ளது. பாலியல் வன்கொடுமை, பாலியல் சீண்டல் மற்றும் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களது விபரங்களை வெளியிடக் கூடாது என்பது சட்டம். அதையும் மீறி வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும். ஆனால், தற்போது பாதிக்கப்பட்ட மாண்வியின் விபரங்கள் FIRல் பதிவு செய்யப்பட்ட நிலையில், அதன் நகல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனது பெயரைத் தெரிவிக்க சென்னை காவல்துறை 6 மணி நேரம் எடுத்துக்கொண்டது. 11 மணியளவில் அந்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் குறித்தான எந்த விபரங்களையும் சென்னை காவல்துறை வெளியிடவில்லை. மாலை 5 மணிக்குத்தான் அந்த நபரது விபரங்கள் வெளியிடப்பட்டன.
ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரங்களை ஒரே நாளில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இந்த சம்பவம் வழக்கின் விசாரணையில் தொய்வினை ஏற்படுத்தும் ஒன்றாகவும் இருக்கிறது. ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாத வழக்குகள் பல இருக்கும் நிலையில், இந்த வழக்கில் ஏன் இத்தனை அவசரம் என கேள்வி எழுப்புகின்றனர்.