சென்னையில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், சட்டமன்ற தேர்தல் பணிகள், கூட்டணி நிலைப்பாடு, திமுகவிற்கு எதிரான பரப்புரை உள்ளிட்டவை தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் இந்த கூட்டத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.
வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குகிறார்.
பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் 3 ஆயிரம் பேர் உள்பட மாநில நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 5 ஆயிரம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்..
இன்று காலை பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது..
மண்டப முகப்பு முதல் மண்டபம் அரங்கு வரை அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது.. பணிகளை முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பெஞ்சமின், அப்துல் ரஹீம், பி வி ரமணா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். சுமார் பத்தாயிரம் பேர் உணவருந்தும் வகையில் சைவ அசைவம் உணவுகள் தயாராக உள்ளன.
சென்னை, ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.. தனியார் பவுன்சர்கள் 250 பேர் மண்டபத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.. மண்டம் சுற்றி 5 இடத்தில் வாகனம் நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
இந்தக்கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள், கூட்டணி நிலைப்பாடு, திமுகவிற்கு எதிரான பரப்புரை முன்னெடுப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில், பாஜகவின் கோரிக்கையான அதிமுக கட்சியை ஒருங்கிணைப்பது குறித்தும் முடிவுகள் எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.