பிரகாஷ் ராஜ், விஜய் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

”களத்தில் இறங்கிப் பேசாத..” - விஜயை மறைமுகமாக விமர்சித்த பிரகாஷ் ராஜ்!

தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தவெக தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்யவில்லை என்றாலும், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்துள்ளார்.

Prakash J

ஒவ்வொரு தொகுதிகளுக்கும் விஜய் சென்று வாக்கு சேகரிக்காதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தவெக தலைவர் விஜயின் அரசியல் குறித்து மறைமுகமாகச் சாடியுள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி கட்சித் தலைவர்கள் பலரும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களும் வாக்காளர்களிடம் தீவிரமாய் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜயும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அவர் 234 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்யவில்லை என்றாலும், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே பிரசாரம் செய்துள்ளார். அதிலும் சில பரப்புரைகள் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளன.

Vijay

இன்னும் சில மாவட்டங்களில் காவல் துறையினர் அனுமதி வழங்கியும் தவெக சார்பில் ரத்து செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வேதனையில் தவெகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் விஜயின் பொம்மையை வைத்து பிரசாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். கட்சி வேட்பாளர்களை அறிவித்தும் அவர்களுக்கு ஆதரவாக, ஒவ்வொரு தொகுதிகளுக்கும் விஜய் சென்று வாக்கு சேகரிக்காதது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தவெக தலைவர் விஜயின் அரசியல் குறித்து மறைமுகமாகச் சாடியுள்ளார்.

பழனியில் சிபிஐ(எம்) வேட்பாளர் என்.பாண்டியின் பிரசார நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஒரு திரைப்படத்தில் நீங்கள் மருத்துவராகவோ, பொறியாளராகவோ அல்லது முதலமைச்சராகவோகூட ஆகலாம். ஆனால், அரசியலில், எப்படி உடனடியாக முதலமைச்சராக ஆக முடியும்? என்னைப்போல நீங்கள் அரசியலைப் பற்றிப் பேசியிருக்கிறீர்களா? மக்கள் பிரச்னைகளைச் சந்தித்தபோது அவர்களுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் அல்லது மொழிக்காகவோ அதன் சுயமரியாதைக்காகவோ நீங்கள் துணை நின்றிருக்கிறீர்களா?

மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பு, உங்கள் திறமைக்காகவே தவிர, உங்கள் அரசியலுக்காக அல்ல. அதே அன்பை உங்கள் அரசியலுக்காகப் பயன்படுத்தலாம். மக்கள் வெயிலில் வரிசையில் நின்று, கட்-அவுட்களை வைத்து, டிக்கெட்டுகளை வாங்கி, தங்கள் வீடுகளையும் வேலைகளையும் புறக்கணித்து உங்கள் மீது அன்பு காட்டினார்கள். இப்போது நீங்கள் அதை உங்கள் அரசியல் பிரவேசத்திற்காகப் பயன்படுத்துகிறீர்களா? பாருங்கள், எனக்கு ஒரு நடிகரைப் பிடித்திருந்தால், என் தொண்டை கரகரக்கும் வரை நான் விசில் அடிக்கலாம். ஆனால், என்னால் அவர்களுக்கு இந்த நாட்டையே கொடுக்க முடியாது. அரசியல் வேறு; சினிமா வேறு. அந்த அன்பு வேறு; இந்தப் பொறுப்பு வேறு. ஒருவர் களத்தில் இறங்கிப் பேச வேண்டும்" என மறைமுகமாகச் சாடியுள்ளார்.