ஆதவ் அர்ஜுனா - திருமாவளவன் pt
தமிழ்நாடு

”வாழ்த்து பெற வந்தேன்; என் உயிர் மூச்சு இருக்கும்வரை..” திருமாவை சந்தித்த பிறகு ஆதவ் அர்ஜுனா பேச்சு!

ஒரு தனையனாக தந்தையிடம் வாழ்த்து பெற்றுக்கொண்டேன் என திருமாவளவனை சந்தித்த பிறகு ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

PT WEB

திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் ஆதவ் அர்ஜுனா. தவெக கட்சியில் தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியான நிலையில், அதற்காக வாழ்த்து பெறுவதற்காக தன்னுடைய ஆசானான திருமாவளவனை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றுள்ளார் ஆதவ் அர்ஜுனா.

ஆதவ் அர்ஜுனா, விஜய்

திருமாவளவனிடம் வாழ்த்துபெற்ற பிறகு ஒரு தனையனாக தந்தையிடம் வாழ்த்து பெற்றுக்கொண்டேன் என ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.

தனையனாக தந்தையிடம் வாழ்த்து பெற்றேன்..

தமிழக வெற்றிக் கழகத்தில் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா, சென்னை அசோக் நகர் அம்பேத்கர் தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.. அப்போது திருமாவளவனுக்கு ஆதவ்அர்ஜுன் அம்பேத்கர் மற்றும் பெரியார் இணைந்து இருக்கக்கூடிய சிலையை பரிசாக அளித்தார்.

அதனைத் தொடர்ந்து சுமார் 35 நிமிடங்கள் தனி அறையில் திருமாவளவன் உடன் ஆதவ் அர்ஜுன் ஆலோசனை மேற்கொண்டார்.

திருமாவளவனை நேரில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா, ”கொள்கை ரீதியான பயணத்தையும், கள அரசியலையும் எனது ஆசான் திருமாவளவன் அவர்களிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன். புதிய பொறுப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் தனையனாக தந்தையிடம் வாழ்த்து பெற்றுக் கொண்டேன்.

புதிய பொறுப்பு தமிழக வெற்றி கழகத்தில் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது, கொள்கை ரீதியாக என்னுடைய பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். எந்த காலத்திலும் அம்பேத்கர், பெரியார் கொள்கைப்படி ஆன அரசியல் பயணமாக இருக்க வேண்டும் என்பதை திருமா அவர்கள் என்னிடம் வலியுறுத்தினார். நிச்சயமாக என்னுடைய மூச்சு உள்ளவரை அதே கொள்கையில் பயணிப்பேன்.

முதலமைச்சரை சந்திக்க வாய்ப்பு இல்லை, ஆனால் எனக்கு மிகவும் பிடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக கே பாலகிருஷ்ணன் போன்றவர்களை நிச்சயம் சந்தித்து அவர்களது வாழ்த்துக்களை பெறுவேன்” என்று கூறினார்.

ஆதவ் நாகரிகமான அரசியலை முன்னெடுத்துள்ளார்..

ஆதவ் அர்ஜுனாவை தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “கட்சியிலிருந்து நீக்கி விட்டார்கள் என்ற பகையை கருதாமல், வலிகள் இருந்தாலும் அதனை மறைத்து புதிய பொறுப்பு தமிழக வெற்றி கழகத்தில் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், என்னுடைய வாழ்த்து தேவை என்று வந்திருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறேன். இது நாகரிகமான அரசியல், ஆதவ் நாகரிகமான அரசியலை முன்னெடுத்துள்ளார், அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறினார்.