செய்தியாளர் - ந.பால வெற்றிவேல்
கர்மவீரர் காமராஜர் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை அதிக அளவில் திறந்தவர் என்கிற பெருமையை பெற்றிருக்கிறார். ஆனால் காமராஜரால் தான் ஐஐடி சென்னை 50-களின் இறுதியில் அமைய காரணம் என்றால் நம்ப முடிகிறதா? இன்று நாடு போற்றும் சிறந்த கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியில் நிர்வாகக் கட்டிடத்தில் காமராஜரின் புகழை போற்றும் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி இன்று சென்னை நகரின் மையப் பகுதியில் ஒரு தீவு போல அமைந்திருக்கும் தனிக்காடு. ஆனால் ஒரு காலத்தில் அது வெள்ளையர்களின் வேட்டையாடும் களமாக இருந்தது. 1956ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி இந்தியாவில் இந்திய தொழில்நுட்ப கழகம் எனப்படும் ஐஐடிகளை தொடங்க நேரு கனவு கண்டார். ஆனால் தென்னிந்தியாவில் ஐஐடியை தொடங்குவதற்கு ஆந்திரா கர்நாடகா கேரளா அன்று மெட்ராஸ் என அழைக்கப்பட்ட தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடும் போட்டி போட்டன.
அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி என்பதால் நேரு முடிவு எடுக்க முடியாமல் தவித்த நிலையில் காமராஜர் சென்னையில் கிண்டி அடர்ந்த காடுகளுக்கு நடுவே தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவ வேண்டும் என பலமுறை நேருவை சந்தித்து முறையிட்டுள்ளார். மெட்ராஸில் ஐஐடியை தொடங்கினால் அதன் மூலம் தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களும் பயன்பெறும் என வாதிட்டார்.
காமராஜரை தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவராக இருந்த சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் எடுத்த முயற்சியின் விளைவாக சென்னை ஐஐடி 1959 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இன்று சென்னை ஐஐடியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வாழ்க்கை தரத்தில் முன்னேறி இருக்கிறார்கள்.
இந்நிலையில், சென்னை ஐஐடி அமைய காரணமாக இருந்த காமராஜரின் பங்களிப்பை போற்றும் விதமாக இவ்வளவு நாட்களாக ஐஐடி வளாகத்தின் வரலாற்று அருங்காட்சியகத்தில் பூட்டப்பட்ட அறையில் இருந்த காமராஜர் சிலை நேற்று முதல் சென்னை ஐஐடி இயக்குனர் கட்டிடம் முகப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மார்பளவு சிலை சீரமைக்கப்பட்டு புத்தம் பொலிவோடு சென்னை ஐஐடியின் நிர்வாக கட்டிடத்தில் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. இன்று இந்திய அளவில் நற்பெயரோடு பல ஆராய்ச்சி மாணவர்களையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் உருவாக்கி வரும் சென்னை ஐஐடிக்கு தொடக்கப்புள்ளி கல்விக்கண் திறந்த காமராஜர் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத விஷயமாகவே இருந்துள்ளது. அவரது பங்களிப்பை போற்றும் விதமாக அமையப்பெற்றுள்ள மார்பளவு சிலை படிக்காத மேதையின் புகழை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.