மும்பை தாக்குதலில் தொடர்புடைய நபரின் மனுவை தள்ளுபடி செய்ய அமெரிக்கா வலியுறுத்தல்! பின்னணி என்ன?
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை நகருக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் தாஜ் ஓட்டல், ஒபேராய் ஓட்டல், நரிமன் இல்லம், சிஎஸ்எம்டி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தில் அமெரிக்கர்கள் 6 பேர் உள்பட 166 பேர் பலியானார்கள். எனினும் இத்தாக்குதலில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதில், அஜ்மல் கசாப் என்ற ஒரு தீவிரவாதி மட்டும் பிடிபட்ட நிலையில், பின்னர் அவனுக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இந்தச் சம்பவத்தில், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவரும் கனடா குடியுரிமை பெற்றவருமான தஹாவூர் உசேன் ராணா என்பவர், கடந்த 2009ஆம் ஆண்டு அமெரிக்க போலீசரால் கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து ராணா சதி திட்டம் தீட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உட்பட கீழ் நீதிமன்றங்கள் மற்றும் பல பெடரல் நீதிமன்றங்களிலும் ராணாவின் சட்டப்போராட்டம் தோல்வியடைந்தது.
இதனையடுத்து கடைசி சட்ட முயற்சியாக, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில், மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, அமெரிக்க அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தஹாவூர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு ஆதரவு அளிப்பதாகவும், அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறினார்.
இந்த வழக்கில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதில் இருந்து விடுவிக்க ராணாவுக்கு உரிமை இல்லை என்று அவர் 20 பக்க சமர்ப்பிப்பில் வாதிட்டுள்ளார். ராணா, தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.