அரசுப் பள்ளி கொட்டகை
அரசுப் பள்ளி கொட்டகை file image
தமிழ்நாடு

இது பள்ளிக்கூடமா? தகரக் கொட்டகையில் தார்ப்பாய் போட்டு இயங்கும் கும்பகோணம் அரசுப் பள்ளி!

PT WEB

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கீழப்பரட்டை  கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுக் கடந்த மே மாதம் விடுமுறையின் போது பள்ளிக் கட்டிடம் முழுவதும் இடிக்கப்பட்டது. பள்ளி திறக்கப்படுவதற்கு முன்பு புதிய கட்டடம் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ற வகையில் வகுப்பறை கட்டிடங்கள் மட்டும்  முதற்கட்டமாகக் கட்டிக் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள்

இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டும் இது வரை புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால், பழைய பள்ளியின் எதிரில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில், தற்காலிகமாக தார்ப்பாய் போர்த்தித் தகரக் கொட்டகை அமைத்து மாணவர்கள் தரையில் அமர்ந்து கொண்டு போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் பயின்று வருகின்றனர்.

சமையல்கூடம்

இதனை தொடர்ந்து தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால், தகரக் கொட்டகைக்குள் மழைநீர் ஒழுகுவதால் மாணவர்களும், ஆசிரியைகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பள்ளியில் உள்ள கோப்புகளும், மாணவர்களின் புத்தகங்கள், நோட்டுக்கள் மழைச் சாரலில் நனைந்து வருவதால் கொட்டகையில் உள்ள தங்கள் புத்தகப் பைகளைக் கம்பியில் மாட்டி மாணவர்கள் தொங்கவிடும் அவல நிலையில் பள்ளி கட்டடம் இயங்கி வருகிறது. 

மேலும் மாணவர்கள் கணிதம் படிப்பதற்கான அட்டவணை உள்ளே மாட்டுவதற்கு இடமில்லாததால், பள்ளியின் வெளியில் உள்ள வேலியில் மாட்டி வைத்துள்ளனர். பள்ளி மாணவர்கள், தலைமையாசிரியை மற்றும் ஆசிரியைகளுக்குச் சுகாதார வளாகம், மற்றும் உணவு கூடம் சாலையின் எதிரில் உள்ளது.

பள்ளி உள்ள சாலை சென்னை, அரியலூர், ஜெயங்கொண்டம், விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை ஆகிய ஊர்களுக்கு வாகனங்கள் செல்லும் சாலை என்பதால் எப்போதும்  வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும். இந்த சாலையைக் கடந்துதான் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். இதனால் ஆசிரியைகள், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பாதுகாப்புப் பணியின் போது அணிந்திருக்கும் மின்னும் உடைகளை அணிந்தபடி, மாணவர்களைப் பாதுகாப்பாகச்  சாலையின் எதிர் புறம் அனுப்பி வைத்து வருகின்றனர்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியைகளின் நிலையைக்  கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய கட்டடம் விரைந்து கட்டிக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது  தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் நம்மிடம் பேசிய போது, "பரட்டை கிராமத்தில் பள்ளிக் கட்டிடம் இடிக்கப்பட்டு ஆறு மாதம் ஆகியும் இதுவரை புதிய கட்டிடம் கட்டுக் கொடுக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள்  தகரக்  கொட்டகை அமைத்துப் படித்து வருகின்றனர். குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர். போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையைக் கடக்க மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தமிழக அரசு உடனடியாக பள்ளி கட்டிடத்தைக் கட்டி கொடுக்க வேண்டும்" என்றார்.

கழிவறை

இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தராஜிடம் விளக்கம் கேட்டபோது, "இந்தப் பள்ளி இடிக்கப்பட்ட போது, காங்கீரிட் கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு முடிவு செய்த போது, பல்வேறு காரணங்களால், அங்கு மாற்ற முடியாமல், இந்த இடத்திற்கு மாற்றப்பட்டது. புதிய வகுப்பறை கட்டுவதற்குக் குழந்தைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைப்பில், நிதி கோரப்பட்டது, ஆனால் அவர்கள்  வழங்குவதற்குத் தாமதமானதால், கும்பகோணம் எம்.எல்.ஏ  சாக்கோட்டை க. அன்பழகனின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கி 3 மாதத்திற்குள் முடிக்கப்படும்" என்றார்.