கர்ப்பிணி meta ai
தமிழ்நாடு

10வது குழந்தை | ஹீமோகுளோபின் குறைபாடு.. விழிப்புணர்வு இல்லாததால் இறந்தே பிறந்த குழந்தை!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கணிக்கோட்டை மலை கிராம கர்ப்பிணிக்கு இரத்த அளவு குறைபாட்டால், பெண் குழந்தை இறந்த பிறந்தது.

PT WEB

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே பெட்டமுகிலாலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடம்பகுட்டை மலை கிராமத்தைச் சேர்ந்த மல்லப்பன் மனைவி மல்லம்மா (40) என்பவர் 10-வது முறையாக கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் இதுவரை மருத்துவ பரிசோதனை செய்யாமலே 9 குழந்தைகளை சுகப்பிரசவமாக பெற்றெடுத்து உள்ளார்.

கர்ப்பிணி

இந்த சூழலில் தற்போது உடலில் ரத்த அளவு 3 கிராமாக குறைந்தும், ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால், மருத்துவ குழுவினர் மருத்துவமனைக்கு வரும்படி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடியும் பரிசோதனைக்கு வர மறுத்துள்ளார். ஆனால் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினரின் உதவியுடன் மருத்துவ குழுவினர் கடம்பகுட்டை மலை கிராமத்திற்கு நடந்தே சென்று 40 வயது கர்ப்பிணியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

இறந்தே பிறந்த குழந்தை..

பின்னர் அவரை அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி மகப்பேறு மருத்துவ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 யூனிட் ரத்தம் கர்ப்பிணிக்கு கொடுக்கப்பட்டது. இதனால் ரத்த அளவு 9க்கு மேல் அதிகரித்ததால் குழந்தை சுகப்பிரசவமாக பிறந்தது. ஆனாலும் கர்ப்பிணியின் உடலில் ரத்தம் குறைவாகவும் அழுத்தம் அதிகமாக இருந்ததால், பெண் குழந்தை (2.100 கி.கி) இறந்து பிறந்தது.

மேலும் கர்ப்பிணிக்கு ரத்தம் தேவையான அளவு கொடுக்கப்பட்டதால், அவர் உயிருக்கு பாதிப்பு இல்லாமல், நலமுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது ரத்த அளவு 9.8 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10 வது முறையாக கருத்தரித்துள்ள மல்லம்மாவுக்கு நான்கு பெண் பிள்ளைகளும் மூன்று ஆண் பிள்ளைகளும் இருக்கின்றன. ஏற்கனவே ஒரு பெண், ஒரு ஆண் குழந்தைகள் இறந்துள்ள நிலையில், தற்போது பத்தாவதாக பிறந்த குழந்தையும் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.