ஆந்திரா | விடிந்தால் பிரசவம்.. ஆனால்.. 9 மாத கர்ப்பிணி கொடூர கொலை.. நடந்தது என்ன?
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள மதுரவாடா பகுதியை சேர்ந்தவர் ஞானேஷ்வர். இவரது மனைவி அனுஷா. கடந்த 2022-ஆம் ஆண்டு இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். ஒருகட்டத்தில் இவர்களின் திருமணம் அனுஷாவின் வீட்டிற்கு தெரியவந்திருக்கிறது. ஆனால் இன்றுவரை ஞானேஷ்வரின் குடும்பத்திற்கு இவர்களது திருமணம் குறித்த தகவல் தெரியவரவில்லை எனச் சொல்லப்படுகிறது.
கணவன் நாடகம் புரியாமல் அதீத காதல் செய்த மனைவி!
இதனிடையேதான் திருமணம் ஆன சிறிது நாட்களில் இருந்து மனைவி அனுஷாவை, ஞானேஷ்வருக்கு பிடிக்காமல் போயிருக்கிறது. எப்படியாவது அனுஷாவை தனது திருமண வாழ்க்கையில் இருந்து விலக்கிவிட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகள் செய்திருக்கிறார்.
அந்தவகையில்தான் தனக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக மனைவி அனுஷாவிடம் கூறியுள்ளார். அப்படி கூறினால் அனுஷா தன்னைவிட்டு பிரிந்துவிடுவார் என நினைத்திருக்கிறார் ஞானேஷ்வர். ஆனால் அனுஷாவோ முன்பைவிட கூடுதல் அன்பைக்காட்டி தனது கணவரை இன்னும் ஆழமாக நேசித்திருக்கிறார்.
ஞானேஷ்வரின் தந்திர முயற்சி தோல்வியடையவே அடுத்தகட்டமாக குளிர்பானத்தில், தூக்க மாத்திரையை கலந்துகொடுத்து அனுஷாவை கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். ஆனால் அதிலும் அனுஷாவிற்கு எதுவும் ஆகாமல் தப்பித்துவிட்டார்
கொலை செய்த கணவன்..
இப்படிப்பட்ட நேரத்தில் அனுஷா கருவுற்றிருக்கிறார். அனுஷா கர்ப்பம் ஆன நாள் முதலே அவரை எப்படியாவது கொலை செய்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்திருக்கிறார் ஞானேஷ்வர். ஒருகட்டத்தில் நாட்கள் செல்லச் செல்ல அனுஷா நிறைமாத கர்ப்பிணி ஆனார். குழந்தை பிறக்கும் நாளும் வந்தது.
மருத்துவமனைக்கு இருவரும் சென்ற நிலையில், மருத்துவரோ உடனடியாக அட்மிட் ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால் ஞானேஷ்வரோ நாளை காலை வந்து அட்மிட் ஆகிக்கிறோம் எனக் கூறிவிட்டு மனைவியை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
குழந்தை பிறந்தால் நிச்சயம் அனுஷாவை பிரியவே முடியாது என நினைத்த ஞானேஷ்வர் இதுதான் சரியான நேரம் என நினைத்து, நிறைமாத கர்ப்பிணியான மனைவி அனுஷாவை அன்றிரவே கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார். அதன்படி மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, மனைவி சுயநினைவை இழந்துவிட்டதாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
வெளிவந்த கணவனின் வெறிச்செயல்..
அங்கு அனுஷா இறந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தவே, அனுஷாவின் பெற்றோர் தங்களது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மனைவி அனுஷாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை ஞானேஷ்வர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அனுஷாவிற்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக தான் சந்தேகிப்பதாலும், தன்னை அடிக்கடி மனைவி அனுஷா தொல்லை செய்ததாலும் கொலை செய்ததாக ஞானேஷ்வர் போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் கூறியுள்ளார். நிறைமாத கர்ப்பிணியை கணவரே கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.