வேங்கைவயல் விவகாரம் நடந்து மூன்று ஆண்டுகள் முடிந்துள்ளது. இருந்தபோதிலும் எந்த நீதியும் எட்டப்படவில்லை, சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த விவகாரம் சட்டப்பேரவை தேர்தலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
செய்தியாளர் - சுப.முத்துப்பழம்பதி, புதுக்கோட்டை
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இந்த பிரச்சனையால் இறையூர் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்த நிலையில் இந்த முறையாவது வாக்களிப்பார்களா..? என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, சட்டப்பேரவை தேர்தலில் வேங்கைவயல் விவகாரம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் மேலோங்கி உள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி இதே நாளில் புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் கண்டறியப்பட்டது.
ஒட்டுமொத்த மனித குலத்தையும் இந்த சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், இது குறித்து முதலில் விசாரணையை தொடங்கிய வெள்ளனூர் காவல்துறையினர் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
ஆனால் போலீசார் சரியான திசையில் இந்த வழக்கை கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த சூழலில், இந்த வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு தமிழக அரசு மாற்றியது.
அதன் அடிப்படையில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி முதல் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே இந்த விவகாரத்தை கண்காணிப்பதற்காக சமூக நீதி கண்காணிப்பு குழுவையும் தமிழக அரசு அமைத்தது. அதேபோல் ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் தனிநபர் ஆணையமும் அமைக்கப்பட்டு அந்த ஆணையமும் வேங்கைவயல் உள்ளிட்ட கிராமங்களில் விசாரணை நடத்தி அதன் அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை 720 நாட்களாக விசாரித்து வேங்கைவயல், இறையூர், முத்துக்காடு, காவேரிநகர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 330 நபர்களிடம் விசாரணை நடத்தி சாட்சியங்களை பெற்றனர். இந்த வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனையும், whatsapp குரூப் உரையாடல் ஒன்றில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தை விமர்சித்த வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு காவலர் உட்பட 5 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் நடத்தினர்.
மேலும் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி கேட்ட நிலையில் அதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது.
இதன்பின் இந்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் வேங்கைவயல் வழக்கில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவை கலந்தது அதே கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகிய மூவரும் தான் என குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்றத்தில் இருந்து குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி வைத்த குற்றச்சாட்டுக்கு பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு பாதிக்கப்பட்ட மக்களையே சிபிசிஐடி போலீசார் குற்றவாளிகளாக சித்தரிப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் இந்த குற்றப்பத்திரிக்கையை ஏற்கக்கூடாது என குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சிபிசிஐடி விசாரித்த அனைத்து சாட்சியங்களையும் ஆதாரங்களையும் தங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து அறிவியல் பூர்வமான சாட்சியங்களும் மனுதாரர்களின் வழக்கறிஞர்களிடம் சிபிசிஐடி போலீசார் வழங்கி உள்ளனர்.
இருந்த போதிலும் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்களை விடுவிக்க வேண்டும், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மூவரும் கொடுத்த மனு இன்னும் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
தொடர்ந்து தங்கள் தரப்பு வாதங்களை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் எடுத்து வைத்து வரும் நிலையில், கடைசியாக 2 நாட்களுக்கு முன்பு டிசம்பர் 24 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் அடுத்த விசாரணையை வருகின்ற ஜனவரி 23ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.
வழக்கு விசாரணையும் சூடு பிடித்துள்ள நிலையில் வேங்கைவயல் கிராமத்தை சுற்றிய பகுதிகளில் போலீசாரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் வேங்கைவயலுக்குள் அத்துமீறி சென்று, சிலர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறியது, போராட்டங்களில் ஈடுபட்டது உள்ளிட்ட பல காரணங்களால் வெளியூர் ஆட்கள் மற்றும் சம்பந்தம் இல்லாத நபர்கள் யாரும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதோடு வேங்கைவயல் கிராமத்தைச் சுற்றி ஏழு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டது. மேலும் நாள் ஒன்றுக்கு சுழற்சி முறையில் இரண்டு டிஎஸ்பி, இரண்டு ஆய்வாளர் மற்றும் 28 காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தற்போது இரண்டு இடங்களில் மட்டுமே தலா இரண்டு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டாலும் வேங்கைவயல் கிராம மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பது எதார்த்த உண்மை.
இந்நிலையில் தான் வேங்கைவயல் விவகாரத்தால் தாங்கள் வீண் பழியை சுமந்ததாக அருகே உள்ள இறையூரை சேர்ந்த மாற்று சமூக மக்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசார் அதே பட்டியல் சமூகத்தை சேர்ந்த மூன்று நபர்களை தவறு செய்தவர்கள் என சுட்டிக்காட்டி உள்ள நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் இறையூரை சேர்ந்த மாற்று சமூக மக்கள் வாக்களிப்பார்களா..? அதேபோல் கடந்த முறை வாக்களித்த மறுத்து இறுதியில் மாவட்ட நிர்வாகத்தின் பேச்சுவார்த்தைக்கு பின்பு வாக்களித்த வேங்கைவயல் கிராம மக்கள் வருகின்ற தேர்தலில் வாக்களிப்பார்களா..? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வேங்கைவயல் விவகாரம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தங்களது பிரச்சார ஆயுதமாக பயன்படுத்துவார்களா..? என்ற பல்வேறு விடை தெரியாத கேள்விகளும் வேங்கைவயல் விவகாரத்தில் இன்னும் ஒளிந்திருக்கிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையே..