2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, நாதக தவெக என நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதிமுக பாஜவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. திமுகவில் ஏற்கனவே உள்ள கூட்டணி கட்சிகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. தேர்தல் நேரத்தில் திமுகவுடன் மாற்று கட்சிகள் இணையுமா? என்பது விரைவில் தெரியவரும்..
நாம் தமிழர் கட்சி தனித்து தான் தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி வருகிறார். அதே போல தமிழக வெற்றிக் கழகம் யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்ற குழப்பம் மக்கள் மத்தியில் தொற்றிக்கொண்டது. கூட்டணி குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறது தவெக இந்த நிலையில் தான் தவெக யாருடன் கூட்டணி வைக்கபோகிறது என்பது குறித்து அக்கட்சியின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..
தவெக தலைவர் விஜய் தலைமையில் மட்டுமே கூட்டணி என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தற்போதைக்கு கட்சியின் பூத் கமிட்டி கருத்தரங்கம் நடத்துவது, மக்களை சந்திப்பதில் இது போன்ற முக்கிய பணிகளில் மட்டுமே தவெக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தவெகவின் உட்கட்டமைப்பை பலப்படுத்துவது, உறுப்பினர்கள் சேர்க்கையை மீண்டும் தொடங்கி உறுப்பினர் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த வேண்டும். அதேபோல மாவட்டம் வாரியாக மக்கள் பிரச்னைகளை கையில் எடுக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்த மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது என்பதால் மக்கள் பயணம் முடிந்த பின்னர் அப்போதைய சூழல் குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் பயணத்தை முடித்த பின்னரே கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என அக்கட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.