முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்.. |பேராபத்தில் பல்கலைக்கழக கல்வி! உயர் கல்விக்கு சேதம்!
“இந்த பல்கலைக்கழகம் தன்னுடைய சுதந்திரச் செயல்பாட்டைக் கைவிட்டுவிட்டு சரண் அடையாது, அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளை கைவிட்டுவிடாது… ஆட்சியாளர்களின் பரிந்துரைகள் கூட்டரசின் அதிகாரத்துக்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது… கல்வியறிவைப் பெறவும், கல்வித்திட்டங்களைத் தயாரிக்கவும், கல்வியை மாணாக்கர்களிடம் கொண்டுசெல்லவும் உருவாக்கப்பட்ட இந்தக் கல்வி நிறுவனத்தின் விழுமியங்களை அச்சுறுத்தும் நோக்கில் அரசின் கட்டளைகள் இருக்கின்றன; எந்த அரசாங்கமும் – எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி – தனியார் பல்கலைக்கழகங்கள் எதைக் கற்றுத்தர வேண்டும், யாரையெல்லாம் படிப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும், கற்றுத்தர யாரை அமர்த்திக் கொள்ள வேண்டும், எந்தப் பிரிவு பாடங்களை மட்டும் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும், எந்த வகையில் அவர்களுடைய ஆராய்ச்சிகள் இருக்க வேண்டும் என்று கட்டளையிடவும் வழிநடத்தவும் அனுமதிக்க முடியாது”.
எந்த துணை வேந்தர் அல்லது இந்திய பல்கலைக்கழகம் இப்படி பல்கலைக்கழக நிர்வாகத்தில் தலையிட்டதற்காக ‘கூட்டரசை’ இவ்வளவு கடுமையாக சாடியுள்ளார் அல்லது சாடியுள்ளது? இதற்கான விடை - ‘எவருமில்லை’.
சுயமரியாதை கொப்பளிக்க அப்படித் துல்லியமாக எதிர்வினை ஆற்றியவர் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத் தலைவர் (துணை வேந்தர் எனலாம்) ஆலன் கார்பர். அந்த பல்கலைக்கழகம், ‘அமெரிக்கா’ என்ற நாடு அரசியல்சட்ட ரீதியாக உருவானதற்கும் முன்பிருந்தே செயல்பட்டுவருகிறது. உலகிலேயே அதிக அதிகாரம் மிக்க ஆட்சியாளர் நான்தான் என்று கருதும் டொனால்ட் டிரம்பின், நேரடி தலையீட்டைத்தான் ஆலன் கார்பர் இப்படி நிராகரித்திருக்கிறார். ரோஷம் மிக்க டிரம்ப் சும்மா இருப்பாரா, அந்த பல்கலைக்கழகத்துக்கு அமெரிக்க கூட்டரசு வழங்கும் 220 கோடி டாலர்கள் மானியத்தையும், 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கான கல்விப்புல ஒப்பந்தப் பணிகளையும் ஒரே ஆணையில் நிறுத்திவைத்துவிட்டார். அதற்குப் பிறகும் அந்த பல்கலைக்கழகம் அவருடைய ஆணைக்குப் பணியவில்லை! அதே கடந்த மாதம் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு கூட்டரசு வழங்கும் 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிதி நிறுத்தப்பட்டது; அந்த பல்கலைக்கழகமோ, ‘உங்களுடைய கட்டளைகள் என்னவென்று தெரிவியுங்கள் - இம்மி பிசகாமல் பின்பற்றுகிறோம்’ என்று தாள் பணிந்துவிட்டது.
தன்னாட்சி உரிமை கிடையாது!
‘பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையம்’ (யுஜிசி) இணையதளத் தகவல்கள்படி, 2023 ஜனவரி 25 நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 1,074 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. இனவாரியாக அவை வருமாறு:
மாநில பல்கலைக்கழகங்கள்
460
நிகர்நிலை பல்கலைகள்
128
மத்திய அரசின் பல்கலைகள்
56
தனியார் பல்கலைகள்
430
மொத்தம்
1,074
இந்த எண்ணிக்கையில் – நாடு சுதந்திரம் பெறுவதற்கும் முன்னதாக - 1857-இல் முதன் முதலாகத் தொடங்கப்பட்ட கல்கத்தா, மதராஸ், பம்பாய் பல்கலைக்கழகங்களும் அடக்கம். மத்திய நிதிநல்கை ஆணையம் – பதவிவழி வேந்தரான ஆளுநர் ஆகியோருடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக சென்னை (மதறாஸ்) பல்கலைக்கழகத்துக்கு 2023 ஆகஸ்ட் முதல் துணை வேந்தர் நியமிக்கப்படாமல் அந்தப் பதவி நிரப்பப்படாமல் இருக்கிறது.
இந்திய பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி உரிமைகள் ஏதும் கிடையாது – இதற்கு முக்கிய காரணம் 1956-இல் இயற்றப்பட்ட பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையச் சட்டம். நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட இந்த சட்டத்தை அமல்படுத்தும் விதம் காரணமாகவே இது தொடர்கிறது. பல்கலைக்கழகங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் சிறந்த கல்வித்தரத்தைப் பராமரிக்கவும்தான் இந்த சட்டம் இயற்றப்பட்டது. தரமான கல்வி கற்பிக்கப்படவும், நேர்மையான வகையில் தேர்வுகள் நடத்தப்படவும், சிறந்த வகையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவும் நிர்வாக நடவடிக்கைகளை உறுதி செய்யவும், மேற்பார்வை செய்யவும் பல்கலைக் கழகங்களுக்கு நிதிநல்கை குழு உரிய வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய, நிதிநல்கை ஆணையச்சட்டத்தின் ‘பிரிவு 12’ அதிகாரம் அளிக்கிறது.
1984-இல் இச் சட்டத்தில் ‘பிரிவு 12-ஏ’ சேர்க்கப்பட்டதுடன் ‘பிரிவு 14’ திருத்தப்பட்டு நிதிநல்கை ஆணையத்தின் அதிகாரம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. நிதி வழங்கும் அதிகாரம் நிதிநல்கும் ஆணையத்திடம் இருப்பதால் பல்கலைக்கழக நிர்வாகத்தின் எல்லாப் பிரிவுகளிலும் அது தலையிட்டு அதிகாரம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுவிட்டது. பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி உரிமை என்ற ஒன்றே இல்லாமல் அதை முழுதாக நிர்மூலமாக்கும் வகையில் நிதிநல்கை ஆணையம் எல்லாவற்றிலும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
‘யுஜிசி’ தான் பெரிய அதிகாரி!
பல்கலைக்கழக – கல்லூரி ஆசிரியர்கள் நியமனம், பாடத்திட்ட வடிவமைப்பு, ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய தலைப்புகள், தேர்வு கட்டமைப்பு உருவாக்கம், தேர்வுகளை நடத்தும் விதம் என்று எல்லாவற்றிலுமே நிதிநல்கை ஆணையம்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. எந்த வகையில் எல்லாம் அது தலையிடுகிறது என்று சில அம்சங்களை மட்டும் தெரிந்துகொள்வோம்:
Ø பல்கலைக்கழக – கல்லூரி ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதி, நியமனங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள்
Ø தேசிய தகுதிகாண் தேர்வு (என்இடி-நெட்)
Ø தேசிய தகுதிகாண் – நுழைவுத் தேர்வு (நீட்)
Ø கூட்டு நுழைவுத் தேர்வு (ஜேஇஇ)
Ø பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு (சியுஇடி-கியூட்)
Ø கற்றல் முடிவுகள் அடிப்படையிலான பாடதிட்ட சட்டக வடிவமைப்பு (எல்ஓசிஎஃப்)
Ø பாட விருப்பத் தேர்வு அடிப்படையில், மதிப்பீடு வழங்கும் தேர்வு முறை (சிபிசிஎஸ்)
Ø தேசிய அளவில் பல்கலைக்கழகங்களைத் தரப்படுத்தும் சட்டகம் (என்ஐஆர்எஃப்)
இவையெல்லாம் போக ‘எஞ்சும் அதிகாரங்களை’ பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பயன்படுத்துவதால், பல்கலைக்கழக துணை வேந்தர்களையே ‘தேர்வு – நியமனங்கள்’ மூலம் தங்களுடைய முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையம் முடிவெடுத்துவிட்டது. (இது பற்றி, 2025 ஜனவரி 1 ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் ‘துணை வேந்தர்கள் – வைஸ்ராய்களாவார்கள்’ என்ற கட்டுரை எழுதியிருக்கிறேன்).
மாநில அரசுகளின் பல்கலைக்கழகங்களிலும் தனியார் பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியப் பணிக்கும் நிர்வாகப் பணிக்குமானவர்களைத் தேர்வு செய்யவும் நியமிக்கவும் – அதிலும் குறிப்பாக துணை வேந்தர் பதவிக்கு - பல்கலைக்கழக நிதிநல்கை குழுவுக்கு எந்த பங்குமே இருக்க வேண்டிய அவசியமில்லை; இதை அனுமதித்தால் அனைத்து பல்கலைக்கழகங்களையும் இறுதியில் அரசுடைமை ஆக்குவதற்கு முந்தைய, கடைசிகட்டச் செயலாக அது அமைந்துவிடும்.
உயர் கல்விக்குதான் அதிக சேதம்
இப்படி எல்லா வகைகளிலும் பல்கலைக்கழகங்களை அரசு கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதால் உயர் கல்விக்கு அது எந்த வகையிலாவது உதவுகிறதா? கல்வித்தரம் அடிப்படையில் உலக அளவில் தயாரிக்கப்பட்ட முதல் நூறு பல்கலைக்கழக பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழகம் கூட இடம் பெறவில்லை. இந்தியாவிலேயே மிகச் சிறந்த கல்விக்கூடம் என்று போற்றப்படும் பம்பாய் ஐஐடியே அந்தப் பட்டியலில் 118-வது இடத்தில்தான் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் அரசு அளித்த ஒரு பதில், 2024 அக்டோபர் 21 தேதியன்று வரை மத்திய பல்கலைக்கழகங்களில் 5,182 பணியிடங்கள் நிரப்பப்படாமலிருக்கின்றன என்று தெரிவிக்கிறது. ஐஐடி என்று அழைக்கப்படும் தொழில்நுட்ப மேலாண்மைக் கல்விக்கூடங்களில் படித்த இந்திய மாணவர்களுக்கு உலக அளவில் பெரிய தொழில் நிறுவனங்களில் அளிக்கப்பட்டுவரும் வேலைவாய்ப்பு எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்று நாடாளுமன்ற நிலைக்குழு (எம்.பி.க்களைக் கொண்டது) கண்டறிந்துள்ளது. 2021-22 முதல் 2023-24 வரையிலான காலத்தில் இந்த வீழ்ச்சி 10% அளவுக்கு இருக்கிறது. என்ஐடி என்று அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்ப கல்வி நிலையங்களில் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தரப்படுவதும் 10.77% குறைந்திருக்கிறது. இந்திய பல்கலைக்கழகங்களில் படித்து அறிவியல் துறையில் நோபல் பரிசு பெற்ற இந்தியராக டாக்டர் சர்.சி.வி. ராமன் (1930) மட்டுமே இருக்கிறார்!
இந்தியப் பல்கலைக்கழகங்கள் பல்வேறு தீமைகளால் பாதிக்கப்பட்டுள்ளன: அவற்றுக்கு அறக்கட்டளைகளிடமிருந்து நிதி கிடைப்பதில்லை, முன்னாள் மாணவர்களின் ஆதரவு குறிப்பிடும்படியாக இல்லை, அரசு அளிக்கும் ஆய்வு உதவித் தொகைகளும் மானிய உதவித் தொகைகளும் போதவில்லை, பாடங்களைத் தேர்வு செய்வதிலும் கற்பிப்பதிலும் ஆசிரியர்களுக்கு அதிக சுதந்திரம் இல்லை, பல்கலைக்கழக நிதி நல்கை ஆணையத்தின் கட்டுப்பாடுகள் மிதமிஞ்சியிருக்கிறது; பல்கலைக்கழக வேந்தர் (ஆளுநர்கள்), இணை வேந்தர் (அந்தந்த மாநில கல்வியமைச்சர்கள்) தலையீடும் அதிகம். பல்கலைக்கழக நிர்வாகத்தில் அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் தலையிட்டு குலைப்பதும் அதிகம்.
கல்விப்புலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு போதிய சுதந்திரம் இல்லை என்பதைக் காட்ட சமீபத்திய உதாரணம் ஒன்று போதும்: தொலைநிலைக் கல்வி முறையில் அஞ்சல் வழியில் பாடங்களை அனுப்பி, அவ்வப்போது மாணவர்களை நேரிலும் சந்தித்து பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்து வைத்து - கல்வி பெற உதவின பல்கலைக்கழகங்கள். இதில் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் மாணவர்கள் சேரலாம் என்ற அனுமதி இருந்தது. இப்போது அஞ்சல்வழியில் கல்வியளிக்கும் தொலைநிலைக்கல்வி நிறுவனங்கள் அவை அமைந்திருக்கும் மாநிலத்தில், அதன் தலைமையகத்தை ஒட்டிய ஓரிரண்டு மாவட்டங்களில் மட்டுமே இப்பணியைச் செய்ய வேண்டும் என்று நிதிநல்கை ஆணையம் புதிய கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. வெகு தொலைதூரத்திலிருக்கும் மாணவர்களை ஈர்க்க புதிய புதிய பாடப்பிரிவுகளைச் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் இனி அந்த பல்கலைக்கழகங்களுக்கும் ஏற்படாது, தங்களுடைய மாநிலத்தில் இன்னின்ன பாடப்பிரிவுகளில் படிக்க வாய்ப்பில்லாத மாணவர்கள், உயர்கல்வியைத் தொடரவும் முடியாது.
சமீப காலங்களில் கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் கல்விக்கான அமைதியான சூழலும் சுதந்திரமும் பாழாகிவருகின்றன. சகிப்புத்தன்மையில்லாத பல குழுக்கள் பல பல்கலைக்கழகங்களில் அவ்வப்போது மாற்றுக் கருத்துள்ளவர்களைத் தாக்குவது, வம்புக்கு இழுப்பது, அமைதியைக் குலைத்து அச்சுறுத்துவது என்று செயல்படுகின்றன. மாணவர்களை மட்டுமல்லாது ஆசிரியர்களையும் குறி வைக்கும் இத்தகைய செயல்கள் இப்போது ஜவாஹர்லால் நேரு பல்கலை., டெல்லி பல்கலை, ஜாமியா மில்லியா பல்கலை., அலிகர் முஸ்லிம் பல்கலை., ஜாதவ்பூர் பல்கலை., மத்திய பல்கலைக்கழகங்கள் சில, ஜம்மு பல்கலைக் கழகம் என்று பரவியுள்ளன.
பல்கலைக்கழக நிதி நல்கை ஆணையத்தின் செயல்பாடு புதிதாக வடிவமைக்கப்பட வேண்டும், கல்விக்கூடங்களில் சுதந்திரம், தன்னாட்சியுடன் கூடிய செயல்பாடு, தலையீடுகளற்ற நிர்வாகம் ஏற்படும் வகையில் அது அமைய வேண்டும். அதற்காக இப்போதுள்ள சட்டம் விலக்கப்பட்டு புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும். இல்லையென்றால் பல்கலைக்கழகங்களில் தன்னாட்சி என்பது பகல் கனவாகிவிடும். அரசின் நிதியுதவியை மட்டுமே நம்பியிராமல் அறக்கட்டளைகள் – முன்னாள் மாணவர்கள் உதவியுடன் பெருமளவு நிதி பெறப்பட்டு பல்கலைக்கழகங்கள் நிர்வகிக்கப்படவில்லையென்றால் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் சுதந்திரம் என்பது வெறும் மாயத் தோற்றமாகவே தொடரும். இப்போதுள்ள நிலைமை தொடர்ந்தால் பணத்தில் கொழுத்த குடும்பங்களும் பெரு நிறுவனங்களும் நடத்தும் தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கைதான் எதிர்காலத்தில் அதிகரிக்கும் (அவற்றில் சில விதிவிலக்காக நன்கு செயல்படவும் வாய்ப்பு உண்டு). கல்வி வழங்க வேண்டும் என்ற அறச்சிந்தனை தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் இருக்கும் என்றாலும், நிர்வாகத்தை வலுப்படுத்த வணிக நோக்கிலான பாடதிட்டங்கள், பட்ட வகுப்புகள் என்று இறுதியில் அங்குதான் போய் நிற்கும்.