சென்னை திருநின்றவூரில் ’அம்மாவ பார்த்துக்கோ கா, என் சாவுக்கு அவங்க குடும்பம் தான் காரணம்’ என வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிட்டு 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநின்றவூர், நாட்சியார் சத்திரம், விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் குமாரி. அவரது மகள் (17 வயது) பிளஸ் 2 முடித்துவிட்டு, ஆறு மாதங்களாக வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்த சூழலில் கடந்த நான்கு மாதங்களாக வீட்டருகில் வசிக்கும் ராஜ் (20 வயது) என்ற பையனை காதலித்து வந்துள்ளார். சில தினங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காதலித்த பையன் பேசாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த சிறுமி, நேற்று மாலை வீட்டில், நைலான் புடவையை கொண்டு ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த திருநின்றவூர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே உயிரை மாய்த்துக்கொண்ட 17 வயது சிறுமி, தற்கொலைக்கு முன்னால் தனது சகோதரிக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில் பேசியிருக்கும் அவர், “ரொம்ப சாரி அக்கா சாரி. அம்மாவ பத்திரமா பார்த்துக்கோ கா, உங்க கிட்டலாம் சொல்லாம போறன் சாரி. அவங்க அம்மா, அக்கா, அப்பா தான் எல்லாத்துக்குமே காரணம். என்னால தான உனக்கும், அம்மாவுக்கும் இவ்ளோ அசிங்கம், நான் சாக போறன் கா எனக்கு இருக்கவே புடிக்கல. இருக்க கூடாது இப்பவே செத்துடணும்னு தோணுதுக்கா. என் சாவுக்கு அவங்க குடும்பம் மட்டும்தான் கா காரணம்” என பேசிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.