கல்வெட்டு கண்டுபிடிப்பு pt web
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி| 11-ஆம் நூற்றாண்டு.. குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆனந்தூரில், குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்த 11ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

PT WEB

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள ஆனந்தூரில் சோழ மன்னர் குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்த சித்திரமேழி பெரியநாட்டார் என்ற பெறுவணிக குழுவினரால் கட்டப்பட்ட தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவிலுக்கு பொன் தானமாக வழங்கப்பட்டதை குறிப்பிடும் 11 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் குழு

சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் பயிலும் ஆய்வு மாணவரான சா.செல்வகுமார் மற்றும் அவரது சகோதரர் எழில் வளவன் ஆகியோர் அளித்த தகவலின் அடிப்படையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் பயிற்றுநரும், தொல்லியல் ஆய்வாளருமான முனைவர். ஜீவா, மற்றும் ஆய்வு மாணவர்கள் வேல்முருகன், செம்பியன், கார்த்திக், பழனிவேல், ஜோசப் அலெக்ஸ் ஆகியோர் அந்த பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டதில் மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட ஓர் கல்லிணை அந்த ஊர் மக்களின் உதவியுடன் JCB இயந்திரம் கொண்டு மீட்டெடுத்து சுத்தம் செய்து கல்வெட்டினை படியெடுத்து ஆய்ந்து பார்த்த போது 4 அடி அகலமும் 5 அடி உயரமும் கொண்ட கல்லின் மேல் பகுதியில் திருமகள் உருவமும் வலது இடது புறங்களில் முறையே சூலம் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் உள்ளன.

அதைத் தொடர்ந்து கீழே பொறிக்கப்பட்டுள்ள 13 வரிகளைக் கொண்ட அக்கல்வெட்டு "ஸ்வஸ்தி ஶ்ரீ கொலோத்தூங்க சோழ தேவருக்கு யாண்டு 15" என்று தொடர்கின்றது. சுங்கம் தவிர்த்த சோழன் என்று அறியப்படும் முதலாம் குலோத்துங்க சோழனின் 15 ஆவது ஆட்சியாண்டை சேர்ந்த கி.பி 1085 ஆம் ஆண்டு கல்வெட்டு ஆனந்தூரில் சித்திரமேழி பெரியநாட்டார் என்ற பெறுவணிக குழுவினரால் கட்டப்பட்ட தான் தோன்றீஸ்வரர் என்ற சிவன் கோவிலுக்கு வழிபாட்டு தானமாக விளக்கெரிக்க எண்ணெய், நெல், பந்தங்கள் போன்றவற்றிற்காக பொன் தானமாக வழங்கப்பட்டதை குறிப்பிடுகிறது.

கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு

மேலும் கல்வெட்டின் இறுதிப் பகுதியில் இந்த தானத்திற்கு தீங்கு விளைவிப்போர் கங்கைக் கரையில் குராற் பசுவைக் கொன்ற தோஷத்திற்க்கு ஆளாவர் என்றும் குறிப்பிடுகிறது. 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த சோழர் கால கல்வெட்டில் வழங்கப்பட்டு வரும் ஆனந்தூர் என்ற பெயரிலே 900 ஆண்டுகளைக் கடந்தும் இந்த ஊர் தொடர்ந்து இன்றும் அதே பெயரிலேயே வழங்கப்பட்டு வருவதை சிறப்பிற்குரிய ஒன்றாகும். மேலும் இவ்வூரின் பிடாரி அம்மன் கோயில் அருகில் வீரர்கள் கையில் வில் ஏந்தியவாறு புடைப்புச் சிற்பதுடன் கூடிய இரண்டு நடுகற்கள் மண்ணில் புதையுண்ட நிலையில் காணப்படுகின்றன.

இந்த கல்வெட்டினை தொல்லியல் மூதறிஞர் முனைவர். பூங்குன்றன் அவர்களிடம் காண்பித்த போது, மேற்குறிப்பிட்ட கல்வெட்டு செய்தியினை உறுதிப்படுத்தினார். தொடர்ந்து, ”இந்த பகுதியில் சித்திரமேழி பெரியநாட்டார் என்ற வணிக குழு கோயில் கட்டியதை குறிப்பிடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டு இது என்றும், இவ்வணிக குழு கட்டிய கோயில்களில் மிகவும் தொன்மை வாய்ந்த ஒன்று திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே தாமரைப்பாக்கம் என்ற இடத்தில் உள்ள அக்னீஸ்வரர் கோவில்” என்ற செய்தியையும் தெரிவித்தார்.