சைபர் க்ரைம் மோசடி மாதிரிப்படம்
தமிழ்நாடு

அதிரவைக்கும் நெட்வொர்க்.. 100 கோடிக்கும் மேல் மோசடி! தனியார் வங்கி மேலாளர் கைதின் பகீர் பின்னணி!

இந்தியா முழுவதும் ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூபாய் 100 கோடிக்கு மேல் மோசடி செய்த சர்வதேச சைபர் கிரைம் கும்பலின் இந்தியாவின் ஏஜென்ட், பிரபல வங்கியின் மேலாளர், தனியார் நிறுவன உரிமையாளர் உட்பட ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெ.அன்பரசன்

சென்னை, பெருங்குடியில் வசிக்கும் கார்த்திக் என்பவர் பைனான்ஸ்  தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் சமூக வலைதளத்தில் வந்த ஆன்லைன் முதலீட்டு வர்த்தக விளம்பரத்தை பார்த்து அதைத் தொடர்பு கொண்டு வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் இணைந்துள்ளார். அந்த குழுவில் மோசடி நபர்கள் அனுப்பிய லிங் மூலமாக முதலீட்டு செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்திருக்கிறார். அதில் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் என்று அந்நபர்கள் சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பி அவர்கள் சொன்னபடி பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தேதிகளில் சுமார் ரூ.1.43 கோடி பணம் செலுத்தியுள்ளார்.

அவர் செலுத்திய பணத்திற்கு ஏற்றவாறு அதிக லாபம் வந்தது போலவும், முதலீடு செய்யப்பட்டது போலவும் சைபர் குற்றவாளிகள் அந்த செயலியில் காண்பித்துள்ளனர். அதன்பின் முதலீடு செய்த பணத்தை எடுக்க முற்பட்ட போது அவர்கள் வெவ்வேறு காரணங்களை கூறி மேலும் பணம் கேட்டு வற்புறுத்தியுள்ளனர். அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை கார்த்திக் உணர்ந்துள்ளார்.

இதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் கார்த்திக் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார்,  தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சூர்யா எனும் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தின் உரிமையாளர் சூர்யா ஶ்ரீனிவாஸ் என்பவரின் வங்கி கணக்குக்கு பணம் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து சூர்யா  ஶ்ரீனிவாஸிடம் விசாரணை நடத்தியதில் சைபர் கிரைம் மோசடியில் அவருக்கு தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவரைக் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஈக்காட்டுதாங்கல் பகுதியிலுள்ள தனியார் வங்கி கிளையின் முன்னாள் மேலாளர் சேஷாத்ரி எத்திராஜ் என்பவர் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டதும், மோசடி செய்யப்பட்ட பணத்தை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பரிவர்த்தனை செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து, வங்கி மேலாளர் சேஷாத்ரி எத்திராஜ்(43) மற்றும் "Money Mule"- களாக செயல்பட்ட அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ்(29), திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன்(33) ஆகிய நபர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வங்கி மேலாளர் சேஷாத்திரி எத்திராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தன.

சேஷாத்திரி தனது வங்கிக் கணக்கில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள கணக்குகளில் நீண்ட நாட்களாக செயல்படாமல் இருக்கும் கணக்குகளை மட்டும் தேர்ந்தெடுத்து சைபர் கிரைம் மோசடி கும்பலுக்கு கொடுத்ததும், தலா ஒரு கணக்கிற்கு ரூ. 5 லட்சம் வரை வாங்கியதும் தெரியவந்தது.

அதேபோல சேஷாத்திரி எத்திராஜ் பணிபுரிந்த வங்கி கிளையில் கணக்கு வைத்திருந்த சூர்யா பல்வேறு வகைகளில் ஹவாலா பணம் பரிமாற்றம் செய்வதை அறிந்த வங்கி மேலாளர் சேஷாத்திரி, சூர்யாவை அணுகி அவரையும் மோசடியில் ஈடுபடுத்தியுள்ளார். கிடைக்கும் பணத்தில் வங்கி மேலாளர் சேஷாத்ரி சூர்யாவுக்கும் பங்கு கொடுத்துள்ளார். இதன் மூலம் தனது நிறுவனத்தில் பணிபுரிந்த நபர்களின் விவரங்களை சேஷாத்திரிக்கு கூறி அதே கிளையில் வங்கி கணக்கு ஆரம்பித்து மோசடி வலையில் தனது நிறுவன ஊழியர்களையும் சூர்யா சிக்க வைத்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

குறிப்பாக வங்கி மேலாளர் சேஷாத்திரி நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை ஆந்திராவைச் சேர்ந்த முக்கிய சைபர் கிரைம் குற்றவாளியான ஸ்ரீநாத் ரெட்டி என்பவருக்கு விற்பனை செய்ததும் ஒரு கோடிக்கு 5 லட்சம் எனும் விகிதத்தில் பணம் பெற்று வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதனை அடுத்து தலைமறைவாக இருந்த ஸ்ரீநாத் ரெட்டியை சைபர் கிரைம் போலீசார் தேடிக்கொண்டிருந்தபோது, வங்கி மேலாளர் சேஷாத்திரி ஸ்ரீநாத் ரெட்டியிடம் ஃபோன் மூலமாக பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அதையொட்டியே சென்னை கே.கே நகர் பகுதியில் ஸ்ரீநாத் ரெட்டி வசித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கே.கே நகர் பகுதியில் தனது குடும்பத்தோடு தங்கி இருந்த ஸ்ரீநாத் ரெட்டி(49) என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

மேலும் ஸ்ரீநாத் வளசரவாக்கம் மற்றும் ஆந்திர பகுதியில் போலி நிறுவனங்கள் நடத்தி அதன் மூலம் சைபர் மோசடியில் Money Mule-களை சேர்த்து வந்ததும் அதற்கு உடந்தையாக அவரது அலுவலக ஊழியரான அனிதா(40) செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதனை எடுத்து சைபர் கிரைம் போலீசார் அனிதாவையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து  2 கணிப்பொறிகள், 4 செல்போன்கள்,  12 ATM கார்டுகள், 33 சிம்கார்டுகள், 10 செக் புக்குகள், 6 சீல்கள் மற்றும் 1 கார்  ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசாரின் விசாரணையில் ஶ்ரீநாத் ரெட்டி சர்வதேச சைபர் கிரைம் கும்பலின் முக்கியமான இந்திய ஏஜெண்டுகளில் ஒருவர் என தெரியவந்தது. மேலும், இவர் சென்னை மற்றும் ஆந்திராவில் பல்வேறு இடங்களில் போலியான 5 Shell  நிறுவனங்களை உருவாக்கி, 150 க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் ஆரம்பித்தும், விலை கொடுத்து வாங்கியும், அதை சர்வதேச சைபர் குற்றவாளிகளிடம் கொடுத்து சுமார் ரூ.150 கோடிக்கும் மேல் மோசடி செய்து பல கோடி ரூபாய் கமிஷன் பெற்றுள்ளதும் தெரியவந்தது.

மேலும், விசாரணையில் ஸ்ரீநாத் ரெட்டிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் தெரியும் என்பதால் இவர் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் ஏஜென்ட்டுகளை நியமித்து அவர்கள் மூலம் இந்தியா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நபர்களிடம் நேரடியாக மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட அனிதா என்பவர் ஶ்ரீநாத் ரெட்டியிடம் தொடர்ந்து 15 ஆண்டுகளாக வேலை செய்து வந்ததும், இவரும் ஒரு போலி Shell  நிறுவனத்திற்கு இயக்குநராக இருந்து வருவதும் தெரியவந்தது. குறிப்பாக வங்கி மேலாளர் சேஷாத்திரி போல பல்வேறு மாநிலங்களில் பல வங்கி ஊழியர்களுக்கு அதிக அளவில் பணம் கொடுத்து வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு விவரங்களை சர்வதேச சைபர் கும்பலுக்கு ஸ்ரீநாத் ரெட்டி விற்பனை செய்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

ஸ்ரீநாத் ரெட்டியால் சர்வதேச சைபர் கிரைம் கும்பலுக்கு விற்பனை செய்யப்பட்ட 150 க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில் 128 வங்கி கணக்குகள் மீது இந்தியா முழுவதும் 120 வழக்குகள் இருப்பதும் அதில் தமிழகத்தில் 18 வழக்குகள் இருப்பதும் சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட சர்வதேச சைபர் கிரைம் கும்பலின் இந்தியாவின் முக்கிய ஏஜென்டான ஸ்ரீநாத் ரெட்டி அவரது அலுவலக உதவியாளர் அனிதா தனியார் வங்கியின் மேலாளர் சேஷாத்திரி எத்திராஜ் உள்ளிட்ட ஆறு நபர்களையும் சைபர் கிரைம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், ஸ்ரீநாத் ரெட்டி, அனிதா, சேஷாத்திரி ஆகிய நபர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர். தொடர் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.