வெறும் 150 கிராம்.. 3 நாட்களில் 3,100 பயணம் விஞ்ஞானிகளை மிரள வைக்கும் பறவை.. | Amur Falcon
செய்தியாளர் ஶ்ரீதரன்
இந்தியன் அமூர் பால்கன் இனத்தைச் சேர்ந்த பறவை ஒன்று, ஒரு நாளைக்குச் சராசரியாக 1,000 கிலோமீட்டருக்கும் மேல் இடைவிடாமல் பறந்து விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'அப்பாபங்' என பெயரிடப்பட்ட ஒரு வயது நிரம்பிய அந்தப்பறவை இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.
இதன் எடை வெறும் 150 கிராம் மட்டுமே. பறக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே, அதாவது 76 மணி நேரத்தில் சுமார் 3,100 கிலோமீட்டர் தூரத்தை இப்பறவைக் கடந்துள்ளது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் மத்திய இந்தியாவைத் தாண்டி, குஜராத் வழியாகச் சென்று தற்போது அரேபியக் கடலுக்கு மேலே பறந்து கொண்டிருக்கிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கிழக்குத் திசையில் வீசும் சாதகமான காற்றைப் பயன்படுத்தி, இது ஒரு நாளைக்குச் சராசரியாக 1,000 கிலோமீட்டர் வேகத்தில் பறந்துள்ளது. இது, உலகிலேயே வேகமாக இடம்பெயரும் வேட்டையாடும் பறவைகளில் ஒன்றாக திகழ்கிறது.
இந்திய வனவிலங்கு நிறுவனம் மேற்கொண்ட கண்காணிப்புத் திட்டத்தின் படி அமூர் பால்கன் பறவைகளுக்கு செயற்கைக்கோள் டிராக்கர் பொருத்தப்பட்டது. இந்த மூன்று பால்கன்களும் தற்போது தங்கள் வருடாந்திர இடம்பெயர்வுப் பாதையின் மிக ஆபத்தான இடத்தில உள்ளன. இந்தியாவுக்கு அப்பால் உள்ள அரேபியக் கடலைக் கடந்து, 6,000 கிலோமீட்டர் இடைவிடாத கடற்பயணம் மேற்கொண்டு சோமாலியாவை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வளவு நீண்ட தொடர்ச்சியான கடற்பயணத்தை மேற்கொள்ளும் மிகச் சில இடம்பெயர்வு இனங்களில் அமூர் பால்கனும் ஒன்றாகும். அதுமட்டுமின்றி, இந்த அமூர் பால்கன்கள் கிழக்கு ஆசியாவிலிருந்து தெற்கு ஆப்பிரிக்காவிற்குச் செல்லும் போது மணிப்பூரில் உள்ள ஒரு அடர்ந்த காடுகளில் ஓய்வெடுத்து, தங்கள் பயணத்தைத் தொடங்கும் என கூறப்படுகிறது..விஞ்ஞானிகள் தற்போது இந்தப் பால்கன்களின் சாகசப் பயணத்தைக் இன்ச் இன்சாக கண்காணித்து வருகின்றனர்.

