பாமக - பாஜக கூட்டணி
பாமக - பாஜக கூட்டணி புதிய தலைமுறை
தமிழ்நாடு

“தமிழகத்தின் அரசியல் நேற்றிரவில் இருந்து மாறியுள்ளது” - அண்ணாமலை

webteam, Angeshwar G

நாடாளுமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு முடிவடைந்த நிலையில், கூட்டணிக் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகின்றன என்பது வரை இறுதி செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்களும் அடுத்தடுத்த நாட்களில் அறிவிக்கப்பட உள்ளனர்.

அதேசமயத்தில் அதிமுக தனது கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் இருந்து வந்தது. அதிமுக - பாமக கூட்டணி அமையும் என செய்திகள் வெளியான நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது பாமக.

BJP PMK alliance

முன்னதாக, நேற்று மாலை திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற நிர்வாககுழுக் கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.முர்த்தி, வழக்கறிஞர் பாலு, வன்னியர் சங்கத்தலைவர் பு.த.அருள்மொழி, பேராசிரியர் தீரன், மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம், துணைத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட 19 பேர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய நலனுக்காகவும், மாநில நலனுக்காகவும், பாமக பாஜகவுடன் கூட்டணி சேர முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் நிறுவனம் ராமதாஸ் பேசியதாக தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து பாமக பொதுச்செயாலர் வடிவேல் இராவணன், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக போட்டியிடும் என்பதை உறுதிப்படுத்தினார்.

LokSabhaElection BJP

இந்நிலையில் இன்று காலை பாஜக, பாமக இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்த கூட்டணயியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2014 ஆண்டு நடைபெற்ற மக்கவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியில் பாமக மீண்டும் இணைந்துள்ளது.

BJP PMK alliance

இதன் பின்னர் அன்புமணி, எல்.முருகன், அண்ணாமலை ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அன்புமணி, “10 ஆண்டுகாலமாக பாமக, டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருந்து வருகிறது. வருகிற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாமக தேசிய ஜனநாயக கூட்டணியுடன் சேர்ந்து போட்டியிட முடிவு செய்துள்ளது. நாட்டின் நலன் கருதி பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர தமிழ்நாட்டில் மாற்றங்கள் வர நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

60 ஆண்டுகாலமாக தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டிருப்பவர்களின் மீது மக்களுக்கு வெறுப்பான சூழல் இருக்கிறது. மக்களுக்கு மாற்றம் வரவேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருக்கிறது. அதை பூர்த்தி செய்யத்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்கள் கூட்டணி தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவிலும் மிகப்பெரிய வெற்றி அடையும். மாண்புமிகு பிரதமர் இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமாவார்” என தெரிவித்தார்.

பின்னர் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தின் மக்கள் சக்தியாக தனிபெரும் அரசியல் இயக்கமாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, இன்று மிக முக்கியமான முடிவை எடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கரத்தினை வலுப்படுத்தி மூன்றாவது முறையாக நானூறு எம்பிக்களைத் தாண்டி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என்ற வேள்வியோடு களமிறங்கியுள்ளார் மருத்துவர் ராமதாஸ்.

தமிழகத்தின் அரசியல் நேற்று இரவில் இருந்து மாறியுள்ளது. தமிழகத்தின் அரசியலை பாமக எடுத்துள்ள முடிவு மாற்றி இருக்கிறது. 2026ல் தமிழகத்தில் நாம் அனைவரும் நினைக்கக்கூடிய அரசியல் மாற்றம் நிகழும். பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து 10 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்” என தெரிவித்தார்.

தருமபுரி, விழுப்புரம், சேலம், அரக்கோணம், மயிலாடுதுறை, திருப்பெரும்புதூர், கடலூர், சிதம்பரம், திண்டுக்கல், ஆரணி, மத்திய சென்னை ஆகியவை பாமக-வின் உத்தேச தொகுதிகளாக உள்ளன.