மலேசியாவில் ஜனவரி 18-ஆம் தேதி முதல் தொடங்கிய ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. 16 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் விளையாடி வந்தன. பின்னர் இப்பிரிவுகளில் முதல் மூன்று இடத்தைப் பிடித்த அணிகள் சூப்பர் சிக்ஸுக்கு தகுதி பெற்றன. இதில் தலா 6 அணிகள் 2 பிரிவாகப் பிரிக்கப்பட்டு சூப்பர் சிக்ஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில் குரூப் 1 பிரிவில் இடம்பெற்றிருக்கும் இந்திய அணி, ஏற்கெனவே அரையிறுதிக்குள் நுழைந்த நிலையில், இன்று (ஜன.28) தன்னுடைய கடைசி சூப்பர் சிக்ஸ் பிரிவில் ஸ்காட்லாந்தைச் சந்தித்தது.
இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த ஸ்காட்லாந்து இந்தியாவை முதலில் பேட் செய்ய பணித்தது. அதன்படி இந்திய அணியில் களமிறங்கிய வீராங்கனைகள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். அதிலும் தொடக்க வீராங்கனைகளான ஜி.கமலினியும் கொங்காடி திரிஷாவும் பட்டையைக் கிளப்பினர். கமலினி 42 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் நங்கூரமாய் நின்ற திரிஷா வாணவேடிக்கை நிகழ்த்தினார். அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 59 பந்துகளில் 13 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 110 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. அவருக்குத் துணையாக 20 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகக் கடினமான இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியில் தொடக்க வீராங்கனைகள் மட்டுமே இரட்டை இலக்க ரன்களைத் தொட்டனர். மற்றவர்கள் எல்லாம் ஒற்றை இலக்கை ரன்களிலேயே நடையைக் கட்டினர். அதற்குத் தகுந்தாற்போல் இந்திய அணியும் பந்துவீச்சும் ஃபீல்டிங்கும் அற்புதமாக இருந்தது.
இதனால், அவ்வணி 14 ஓவர்களில் 58 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் சதமடித்த சாதித்த கொங்காடி திரிஷா பந்துவீச்சிலும் மிரட்டினார். அவர், 2 ஓவர்களில் 6 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை அறுவடை செய்தார். இதன்மூலம் மேன் ஆஃப் மேட்ச் விருதையும் அவர் தட்டிச் சென்றார்.