U19 மகளிர் டி20 WC | திணறிய வங்கதேசம்.. எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!
ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது, மலேசியாவில் ஜனவரி 18-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், பிப்ரவரி 2-ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா உட்பட மொத்தம் 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதில், லீக் போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் தற்போது சூப்பர் சிக்ஸ் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குரூப் 1 பிரிவில் இடம்பெற்ற வங்கதேச மற்றும் இந்திய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா, பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய வந்த வங்கதேச அணி, தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அவ்வணியின் தொடக்க வீராங்கனைகள் முதல் நடுநிலை வீராங்கனைகள் பலரும் ஒற்றை இலக்க ரன்களிலேயே நடையை கட்டினர்.
9.3 ஓவர்களில் 22 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தத்தளித்தது. எனினும், அவ்வணியில் ஓரளவு தாக்குப் பிடித்து நின்ற கேப்டன் சுமையா அக்தர் ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 21 ரன்கள் எடுத்தார். இறுதியில் அவ்வணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் 4 ஓவர்களை வீசிய வைஷ்ணவி ஷர்மா, 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர் 65 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி, கொங்காடி திரிஷாவின் அதிரடி ஆட்டத்தால் எளிதிலேயே வெற்றிபெற்றது. அவர் 31 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து அவுட் ஆனபோதும், பின்னர் வந்த கேப்டன் நிக்கி பிரசாத்தும் (5), சானிகாவும் (11) ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில் இந்திய அணி, 7.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியா அடுத்து, சூப்பர் சிக்ஸ் பிரிவில் ஸ்காட்லாந்துடன் வரும் 28ஆம் தேதி மோத இருக்கிறது. தற்போது வரை இந்தியா குரூப் 1 பிரிவில் முதல் இடத்தில் உள்ளது. இதன்மூலம் அதன் அரையிறுதிப் போட்டி உறுதியாகி உள்ளது.