Australian team has been exposed in sandpaper issue Reuters
விளையாட்டு

ஸ்டீவ் ஸ்மித் செய்த மாபெரும் தியாகம்: கொண்டாடும் கிரிக்கெட் உலகம்.. அம்பலமான ஆஸ். அணியின் கோர முகம்!

ஆஸ்திரேலியா அணியின் மிகப்பெரும் மோசடியான சான்ட்பேப்பர் விவகாரம் தற்போது மீண்டும் வெடித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கோர முகம் அம்பலமாகியுள்ளது.

Praveen Joshva L

கடந்த 2018-ம் ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய இளம்வீரர் கேமரூன் பேன்கிராப்ட் (Cameron Bancroft) ரிவர்ஸ் ஸ்விங் வரவழைக்க திட்டமிட்டு உப்புத்தாள் என அழைக்கப்படும் சான்ட்பேப்பரை வைத்து பந்தை சேதப்படுத்திய வீடியோ வெளியாகி இணையத்தை உலுக்கியது.

பின்னர் இந்த விவகாரத்தில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு பேன்கிராப்ட்க்கு 9 மாதங்கள் தடை, கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னருக்கு 12 மாதங்கள் கிரிக்கெட் ஆட தடைவிதிக்கப்பட்டது. அதே நேரம் பிற வீரர்கள் இதில் சம்மந்தப்படவில்லை என்று விடுவிக்கப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில் அப்போது அணியில் இருந்த மூத்த வீரர் கவாஜா, தனது சுயசரிதை நூலில்,சான்ட்பேப்பர் விவகாரத்தில் முழு ஆஸ்திரேலியா அணியும் ஈடுபட்டது என்றும், அனைவர்க்கும் இது தெரியும் என்றும் கூறியிருந்தார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், " பந்தைச் சேதப்படுத்த ஒட்டுமொத்த அணியும் சேர்ந்து ஒரு பெரிய திட்டத்தை வகுத்தது என்பது முற்றிலும் அபத்தமானது. இது பந்துவீச்சாளர்களுக்கு தெரியாது" என்று கூறியிருந்தார். மேலும் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளிட்ட வீரர்களும் தங்களுக்கு இந்த சம்பவம் குறித்து முன்பே தெரியாது என்று கூறியிருந்தனர்.

தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பேன்கிராப்ட் தி வெஸ்ட் ஆஸ்திரேலியன் (The West Australian) நாளிதழில் எழுதிய கட்டுரையில், அணியின் ஊடக மேலாளர் கேட் ஹட்சிசனைத் (Kate Hutchison) தவிர, அந்தத் தொடரில் இருந்த ஏறத்தாழ அனைத்து வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் பந்தைச் சேதப்படுத்தும் இந்தத் திட்டம் குறித்து முழுமையாகத் தெரிந்திருந்தது என்று குற்றம் சாட்டினார். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் சேர்ந்தே இந்த திட்டத்தை செய்து தற்போது நாடகமாடுவது அம்பலமானது.

இந்த நிலையில், இந்த செயலை செய்ததற்காக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு 12 மாதங்கள் கிரிக்கெட் ஆட தடைவிதிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் இந்த விவகாரம் குறித்து எந்த ஒரு கருத்தையும் கூறாதது பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றுள்ளது.

உலகின் நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேனாக அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தபோதே இந்த தடை காரணமாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியை இழந்தார். சிட்னி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தனது தவறுக்காகக் கதறி அழுது மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு யாரையும் குறை சொல்லாமல் மீண்டும் ஒரு சாதாரண வீரராக அணிக்குள் வந்து ரன்களைக் குவித்தார்.

தற்போது சான்ட்பேப்பர் விவகாரம் தொடர்பாக கவாஜா, பான்கிராஃப்ட், கம்மின்ஸ், வார்னர் என அனைவரும் பொதுவெளியில் மாறி மாறி அறிக்கை விட்டு ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கும் போதும், இந்த நிகழ்வில் அதிகம் பாதிக்கப்பட்ட ஸ்மித் எதுவும் பேசாமல் அமைதி காத்துவருவது அவரது மதிப்பை உயர்த்துவதாகவும், தனது அணி மீதான அவரின் மதிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து ஊடகங்களும் ரசிகர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.