40 ஆண்டுகளில் பார்த்த 'மிகப்பெரிய துரோகி' கவாஜா - விமர்சிக்கும் தென்னாப்பிரிக்க வீரர்
செய்தியாளர் - M.மீரா
2018-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை உலுக்கிய பந்தை சேதப்படுத்திய விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தனது சுயசரிதை புத்தகத்தில் பல்வேறு தகவல்களை வெளியிட்ட முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜாவை தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஃபானி டி வில்லியர்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
2018-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் சாண்ட்பேப்பரைப் பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியது தொலைக்காட்சி கேமராவில் பதிவானது. இதையடுத்து அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோர் தண்டிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தனது 'Sabr' என்ற சுயசரிதை புத்தகத்தில் இந்த விவகாரம் குறித்து எழுதியுள்ள கவாஜா, பந்தை சேதப்படுத்தும் திட்டம் குறித்து அணியில் இருந்த அனைவருக்கும் தெரியும் என்றும், மூன்று வீரர்கள் மட்டுமே இதற்குப் பொறுப்பேற்றது சரியல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தென்னாப்பிரிக்காவின் கெபர்ஹாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்கு முன்பே சாண்ட்பேப்பர் பயன்படுத்தப்பட்டதாகவும், 2017-18 ஆஷஸ் தொடரின்போதும் பந்தின் தையல் பகுதியை சேதப்படுத்தி ரிவர்ஸ் ஸ்விங் பெற முயற்சி நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஃபானி டி வில்லியர்ஸ், கவாஜாவை தனது 40 முதல் 50 ஆண்டுகால கிரிக்கெட் அனுபவத்தில் பார்த்த மிகப்பெரிய துரோகி என்று விமர்சித்துள்ளார். சக வீரர்களின் ரகசியங்களை வெளியிட்டு அணிக்குள் இருந்த நட்பையும் நம்பிக்கையையும் கவாஜா சீர்குலைத்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே, பான்கிராஃப்ட்டும் இந்த விவகாரம் குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார். பந்தை சேதப்படுத்தும் திட்டம் குறித்து வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளிட்ட அணியின் பலருக்கும் தெரியும் என்றும், பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்களிடமிருந்து தனக்கு ஊக்கம் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சுயாதீன விசாரணைக் குழுவை அமைக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. சுமார் ஒரு மாதம் நடைபெறவுள்ள இந்த விசாரணையில், புதிதாக எந்த வீரர் மீதும் தண்டனை விதிக்கப்படாது என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

