கரிஷ்மா கோட்டக், ஹர்ஷித் தோமர் insta
T20

WCL Final | பேட்டி கண்ட பெண் தொகுப்பாளர்.. காதல் பற்றிப் பேசிய உரிமையாளர்.. #Viralvideo

WCL உரிமையாளர் ஹர்ஷித் தோமர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் கரிஷ்மா கோட்டக்கிடம் தெரிவித்த கருத்து அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறது.

Prakash J

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரின் இரண்டாவது சீசனானது கடந்த ஜுலை 18-ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா முதலிய 6 சாம்பியன்ஸ் அணிகள் பங்கேற்றன. நடப்புத் தொடரில் ஏபிடி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், யுவராஜ் சிங், பிரட் லீ, இயன் மோர்கன், ஷாஹித் அப்ரிடி முதலிய நட்சத்திர முன்னாள் வீரர்கள் பங்கேற்றுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது. லீக் போட்டிகள் முடிந்த நிலையில், பாகிஸ்தானும் தென்னாப்பிரிக்காவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

முன்னதாக, அரையிறுதியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட மறுத்ததைத் தொடர்ந்து அந்த அணி நேரிடையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. பின்னர் ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட் செய்த பாகி. அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக சர்ஜீல் கான் 76 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் ஏபி டி வில்லியர்ஸின் அதிரடி சதம் மூலம் அணியை வெற்றிபெற வைத்தார். அவர் 60 பந்துகளில் 12 பவுண்டரி, 7 சிக்ஸருடன் 120 ரன்கள் எடுத்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுமுனையில் அவருக்குத் துணையாக டுமினியும் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அந்த அணி, 16.5 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதன்மூலம், தென்னாப்பிரிக்கா அணி, முதல் உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் பட்டத்தை வென்றது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்தப் போட்டி முடிந்ததும் WCL உரிமையாளர் ஹர்ஷித் தோமர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் கரிஷ்மா கோட்டக்கிடம் தெரிவித்த கருத்து அனைவரையும் திகைக்க வைத்தது. போட்டி முடிந்ததும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கரிஷ்மா கோட்டக், WCLஇன் உரிமையாளர் ஹர்ஷித் தோமரை பேட்டி கண்டார்.

அப்போது கரிஷ்மா, “போட்டியின் வெற்றிகரமான முடிவை எவ்வாறு கொண்டாடத் திட்டமிட்டுள்ளீர்கள்” என அவரிடம் கேட்டார். அதற்கு அவர் சட்டென்று கண்ணைக்கூட இமைக்காமல், "ஒருவேளை இது முடிந்ததும், நான் உங்களுக்கு முன்மொழியப் போகிறேன் (உங்களிடம் காதலைத் தெரிவிக்கப் போகிறேன்)" எனப் பதிலளித்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத, அதுவும் நேரலையில் வெளியிடப்பட்ட இந்தக் கருத்து, கரிஷ்மாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனினும் அவர், "ஐயோ கடவுளே" என உச்சரித்து, பின் அமைதியாகி மீண்டும் தன் பணிக்குத் திரும்பினார். அந்தத் தருணத்தின் திடீர் நிகழ்வு சமூக ஊடகங்களைச் சூடாக்கியது. பல பார்வையாளர்கள் இந்த உரையாடலை அருவருப்பானதாகவும் சங்கடமானதாகவும் கருதினர். இருப்பினும், இந்த உரையாடலைக் கண்டு ஹர்ஷித் பதற்றமடையவில்லை. சம்பவம் நடந்த சிறிதுநேரத்திலேயே, அவர் கரிஷ்மாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டார். அது, இதய ஈமோஜியுடன் தலைப்பிடப் பட்டிருந்தது.