WCL : வயசானாலும் ஸ்டைல், மாஸ் குறையல.. 41 பந்துகளில் சதம் விளாசி மிரட்டிய ஏபி டி வில்லியர்ஸ்!
உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரின் இரண்டாவது சீசனானது கடந்த ஜுலை 18-ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா முதலிய 6 சாம்பியன்ஸ் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. நடப்புத் தொடரில் ஏபிடி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், யுவராஜ் சிங், பிரட் லீ, இயன் மோர்கன், ஷாஹித் அப்ரிடி முதலிய நட்சத்திர முன்னாள் வீரர்கள் பங்கேற்றுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இங்கிலாந்து சாம்பியன்ஸுக்கு எதிரான உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) தொடரின் 8வது போட்டியில், தென்னாப்பிரிக்க வீரர் ஏபி.டி.வில்லியர்ஸ் சதமடித்து அசத்தினார்.
இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த தென்னாப்பிரிக்கா அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அவ்வணியில் அதிகபட்சமாக மஸ்டர்டு 39 ரன்கள் எடுத்தார். பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு ஏபிடி வில்லியர்ஸ் சிம்மசொப்பனமாக விளங்கினார்.
இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணியின் பந்துவீச்சை நாலாபுறம் சிதறடித்த அவர், இறுதிவரை களத்தில் நின்றதுடன் 51 பந்துகளில் 15 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 116 ரன்கள் எடுத்து அணியையும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். மறுபுறம் அவருக்குத் துணையாக ஹாசிம் ஆலாவும் 29 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி, 12.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி, புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது. முன்னதாக, இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு எதிராகவும் அவர் 63 ரன்கள் எடுத்திருந்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஐபிஎல் முதலிய அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் விலகிய ஏபி டி வில்லியர்ஸ், 4 ஆண்டுகளுக்கு பிறகு WLC போட்டியில் கம்பேக் கொடுத்தார். ஆனால் தற்போதும் அதே மிரட்டலான பேட்டிங் மற்றும் அசத்தலான ஃபீல்டிங்கால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் ஏபிடி வில்லியர்ஸ்.