ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 14 வயது வீரரான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர், ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிவேக சதம் அடித்த வீரர் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற பல்வேறு சாதனைகளை சூரியவன்ஷி படைத்தார். அந்தப் போட்டியில் சீனியர் வீரர்கள் என்றும் பாராமல் அவர்களுடைய பந்துவீச்சை நாலாபுறமும் பவுண்டரி எல்லைக்கு விரட்டியபடியே இருந்தார். இதனால், ஒரேநாளில் உலகம் முழுவதும் வைரலானார்.
இந்த நிலையில், சூரியவன்ஷி குறித்த வயது பேசுபொருளாகி உள்ளது. மேலும் இணையத்திலும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. உண்மையிலே அவருக்கு 14 வயதுதான் ஆகிறதா அல்லது வயதில் மோசடி செய்துள்ளாரா எனக் கேள்விகள் பறந்து வருகின்றனர். முன்னதாக, பயனர் ஒருவர், ”இந்த வைபவ் பையன் வயது மோசடி செய்திருந்தாலும், 15-16 வயதில் சாதனை நிகழ்த்தியிருக்கிறான்” எனத் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளித்த மற்றொரு பயனர், ஒரு நேர்காணல் அளிக்கும் பழைய வீடியோவைப் பதிவேற்றி , "வைபவ் நிச்சயமாக அவர் கூறுவதைவிட அதிக வயதானவர்” எனத் தெரிவித்துள்ளார். மூன்றாவது நபரோ, “வைபவ் சூர்யவன்ஷிக்கு 14 வயதுதான் ஆகுதுன்னு சொல்லவே முடியாது. இது 3-4 வயது வீடியோ. அவரே தன்னுடைய வயதைவிட சின்னவனா இருக்கேன்னு ஒத்துக்கிட்டாரு. 15 வயசுல இல்ல! இந்த வழக்கை @BCCI ஆழமா விசாரிக்கணும். குற்றவாளின்னு நிரூபணமானா அவருக்கு தடை விதிக்கணும்” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இதே விவகாரத்தை முன்னாள் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கும் கேள்வி எழுப்பியுள்ளார். ”கிரிக்கெட்டிலும் வயது மோசடி குடியேறிவிட்டதா” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவருடைய சமூக ஊடகப் பதிவில், “வீரர்கள் கிரிக்கெட்டிலும் தங்கள் வயதைக் குறைக்கத் தொடங்கியுள்ளனர்” எனப் பதிவிட்டுள்ளார். இது, வைபவ் சூரியவன்ஷியைச் சுட்டிக்காட்டுவதாகப் பயனர்கள் தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட்டில் இப்படி வயதை குறைவாகச் சொல்லி களத்திற்கு வருவது என்பது புதிதல்ல. வயதைக் குறைவாகச் சொல்லி ஒருசில கிரிக்கெட் வீரர்கள் சிக்கியிருக்கிறார்கள். வயது மோசடி அல்லது ஒரு வீரரின் வயதைத் தவறாக சித்தரிக்கும் நடைமுறை, இந்திய விளையாட்டில், குறிப்பாக ஜூனியர் மற்றும் வயது பிரிவு மட்டங்களில் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்னையாகும். எனினும், கடுமையான சரிபார்ப்பு செயல்முறைகளால், இந்த சிக்கலை தீர்க்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.